எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 25 காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிப்பது வழக்கம். ஆனால் இலங்கை கடற்படையோ, எல்லை தாண்டி தங்களது நாட்டின் கடற்பரப்புக்குள் தமிழகம்- புதுவை மீனவர்கள் நுழைந்துவிட்டதாக படகுகளுடன் மீனவர்களை கைது செய்து சிறைகளில் அடைத்து சித்திரவதை செய்வது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இலங்கையின் இந்த அட்டூழியத்தைக் கண்டித்து மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு இது தொடர்பாக பல முறை கடிதம் எழுதி உள்ளார். ஆனாலும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் நீடிக்கிறது.
இந்நிலையில் காரைக்காலில் இருந்து 2 விசைப் படகுகளுடன் மீன்பிடிக்க சென்ற 25 காரைக்கால் மீனவர்கள், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் காங்கேசன்துறை துறை துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அந்நாட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த சம்பவம் மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
