தமிழக மீனவர்களை அடுத்தடுத்து சிறைபிடிக்கும் இலங்கை- டெல்லிக்கு மீண்டும் ஸ்டாலின் கடிதம்!

Published On:

| By Minnambalam Desk

TamilNadu Fishermen

தமிழக மீனவர்களை அடுத்தடுத்து இலங்கை கடற்படை கைது செய்து வரும் நிலையில் அனைத்து தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். TamilNadu Fishermen

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள மற்றொரு சம்பவத்தை ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். 30.06.2025 அன்று இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏழு மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

இரண்டே நாட்களுக்குள் மீனவர்கள் கைது செய்யப்படும் இரண்டாவது சம்பவம் இது. பருவகால மீன்பிடித் தடைக்குப் பிறகு சமீபத்தில்தான் மீன்பிடித் தொழிலை மீனவர்கள் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே 48 இந்திய மீனவர்கள் இலங்கைக் காவலில் உள்ள நிலையில், இத்தகைய தொடர் கைது நடவடிக்கைகள் மீனவ சமூகத்தினரிடையே கடுமையான துயரத்தையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தி வருகிறது. எனவே, சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை ஒன்றிய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அந்த கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share