சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெறும் நிலையில் இப்போதே பல அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. ஆனால் பாமகவில் மட்டும் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நடந்து வரும் மோதல் அக்கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பாமக நிறுவனர் ராமதாஸ், தைலாபுரத்தில் அடுத்தடுத்து கூட்டங்களை நடத்தி கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.
கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி பாட்டாளி சமூக ஊடக பேரவை ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அத்துடன், தைலாபுரத்தில் நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த அரசியல் பயிலரங்கத்தையும் தொடங்கி வைத்தார் ராமதாஸ். அதனைத் தொடர்ந்து நேற்று செப்டம்பர் 1ஆம் தேதி பாமக நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது.
மூன்றாவது நாளான இன்று (செப்டம்பர் 2) பாமக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தை கூட்டினார் ராமதாஸ். இக்கூட்டத்தில் சுமார் 300 பேர் கலந்துகொண்டனர்.

வழக்கமாக பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் உட்பட அனைத்து கூட்டங்களும், அவரது வீட்டிற்கு வெளியே உள்ள தோட்டத்தில் தான் நடைபெறும்.
ஆனால் இந்த முறை தனது வீட்டிற்குள் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினார் ராமதாஸ். இதனால் தங்களது தலைவர் வீட்டின் உட்பகுதியை முதன் முறையாக இன்றுதான் கண்டதாக கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் ராமதாஸின் மூத்த மகளும், பாமக தலைமை நிர்வாக குழு உறுப்பினருமான ஸ்ரீகாந்தியும் முதன் முறையாக பங்கேற்றார். அவரைக் கண்டதும் அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் அனைவரும் அன்போடு ’அம்மா, அம்மா’ என அழைத்தனர். பின்னர் கூட்டம் முடிந்ததும் அனைவரும் காந்தியுடன் புகைப்படம் எடுத்தனர். மேலும் தனித்தனியாக புகைப்படம் எடுத்த ஒவ்வொருவரும், அவரை தங்கள் தொகுதிக்கும் வரும்படியும் அழைப்பு விடுத்தனர்.
கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில், “கட்சியில் நிறைய திசை மாறிய பறவைகள் இருக்கின்றன. அந்த பறவைகள் வந்தாலும் பரவாயில்லை, போனாலும் பரவாயில்லை. நான் சொல்கிறேன், இங்கே இருக்குறவங்க தான் எம்.எல்.ஏ., எம்.பி ஆவீர்கள். நான் உங்களை எந்த சூழ்நிலையிலும் கைவிடமாட்டேன். நீங்கள் எதற்கும் யோசிக்கவோ, பயப்படவோ வேண்டாம்.
நான் உயிருடன் இருக்கும் வரைக்கும் நீங்கள் தான் நிரந்தர பொறுப்பாளர்கள். சரியாக உழைத்தால் நம்மால் 50 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. அதற்கு நான் சொல்வதை செய்யுங்கள்.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் வெறும் 37 எம்.எல்.ஏக்களை வைத்துக்கொண்டு, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார் குமாரசாமி. நாம் 50 தொகுதிகளில் வென்றாலும், பாமகவும் ஆட்சியில் அமரும்.
அதற்கு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 18 முதல் 30 வரையுள்ள 2000 பெண்கள் மற்றும் 2000 ஆண்களின் பட்டியலை எடுத்து எனக்கு கொடுங்கள்.
அவர்களுக்கு சுழற்சி முறையில் நீங்கள் அரசியல் பயிற்சி கொடுக்க வேண்டும். அரசியல் தெளிவு வந்து விட்டால் அவர்கள் நம்மை ஜெயிக்க வைப்பார்கள். அவர்களால் 50 ஆயிரம் பேரை நமக்கு ஆதரவாக திரட்ட முடியும்” என பேசினார்.

அப்போது அங்கிருந்த ஒரு நிர்வாகி, “அய்யா நீங்க கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வர வேண்டும்” என கோரிக்கை விடுத்தார். அதற்கு ராமதாஸ் “ஏன் எனக்கு கிரேன் வைத்து மாலை போட போறீங்களா? இல்ல 500 வண்டில ஊர்வலம் போவீங்களா?” என கிண்டலாக கேள்வி எழுப்பினார்.
சமீபத்தில் கிருஷ்ணகிரி சென்ற அன்புமணிக்கு இப்படி தடபுடல் வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதனை மறைமுக சுட்டிக்காட்டி தான் கிண்டலடித்தார் ராமதாஸ்.
அதற்கு அந்த நிர்வாகியும், ”நீங்க ஆணையிடுங்க அய்யா நான் செஞ்சிடுறேன்” என கூறினார்.
இந்த கூட்டத்தில் முக்கியமாக அன்புமணியை பற்றி யாருமே ஒரு வார்த்தைக் கூட பேசவே இல்லை. இறுதியாக மாவட்ட செயலாளர்களிடம் உறுப்பினர் சேர்க்கை மாடலை கொடுத்த ராமதாஸ், தான் குறிப்பிட்ட அந்த 50 மாவட்டங்களில் மட்டும் தீவிரமாக பணியாற்ற அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்.