பாமகவில் புதிய திருப்பமாக, அக்கட்சியின் செயல் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கும் டாக்டர் ராமதாஸ் முடிவுக்கு அவரது மூத்த மகள் ஶ்ரீ காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிவிட்டு செயல் தலைவராக நியமித்தார் ராமதாஸ். பாமக நிறுவனர் மற்றும் தலைவர் நானே என்றும் ராமதாஸ் அறிவித்தார்.
ஆனால் இதனை அன்புமணி ஏற்கவில்லை. பாமகவின் தலைவராகவே தொடருவேன் என பிடிவாதமாக இருக்கிறார் அன்புமணி.
பாமகவில் அப்பா ராமதாஸ், மகன் அன்புமணி இடையேயான இந்த மோதல் ஓயவில்லை. இந்த நிலையில் பாமகவின் ஒழுங்கு நடவடிக்கை குழு, அன்புமணிக்கு எதிராக 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து விளக்கம் கேட்டது. இந்த விளக்கங்களுக்கு ஆகஸ்ட் 31-ந் தேதிக்குள் அன்புமணி பதிலளிக்கவும் அவகாசம் தரப்பட்டது.
ஆனால் அன்புமணி தரப்பில் பதிலளிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து அன்புமணி பதிலளிக்க, செப்டம்ப ர் 1-ந் தேதி நடைபெற்ற பாமக நிர்வாக குழுக் கூட்டத்தில் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று மீண்டும் பாமக நிர்வாகக் குழு கூட்டம், ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாமக கவுரவத் தலைவர் ஜிகே மணி, ராமதாஸ் மூத்த மகள் ஶ்ரீ காந்தி உட்பட மொத்தம் 20 நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இன்றைய கூட்டத்தில் பாமகவின் செயல் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கும் முடிவை ராமதாஸ் அறிவிக்க இருந்தார். ஆனால் பாமக நிர்வாகக் குழுவில், அன்புமணியின் செயல் தலைவர் பதவியை பறிக்கவே கூடாது என அவரது மகள் ஶ்ரீகாந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஶ்ரீகாந்தியின் இந்த எதிர்ப்பு ராமதாஸ் உள்ளிட்ட பாமக நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத்ததாம்.
இதனையடுத்தே செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், செப்டம்பர் 10-ந் தேதி வரை அன்புமணி பதிலளிக்க அவகாசம் தருவதாக மட்டும் கூறினார்.
அப்பா ராமதாஸையும் தம்பி அன்புமணியையும் சேர்த்து வைக்க ஶ்ரீ காந்தி எடுத்த பல முயற்சிகள் தோல்வி அடைந்தன. இந்த நிலையில் தம்பி அன்புமணியின் கட்சி பதவியை அப்பா ராமதாஸ் பறிக்கக் கூடாது என கட்சி நிர்வாகக் குழுவிலேயே ஶ்ரீ காந்தி எதிர்ப்பு தெரிவித்திருப்பது பாமகவினரிடையே பேசுபொருளாகி இருக்கிறது.
மேலும், பாமகவின் செயல் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கும் அறிவிப்பை வெளியிடும் நாளிலேயே உடனடியாக நீதிமன்றத்துக்கு போய் பாமக கட்சி பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை அன்புமணி பயன்படுத்துவதற்கு தடை வாங்குவதற்கும் ராமதாஸ் தரப்பு தயாராக இருக்கிறது என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
இதனிடையே, தம்மை செயல் தலைவர் பதவியில் இருந்து நீக்கி இன்று ராமதாஸ் அறிவிக்கக் கூடும் என தெரிந்து கொண்ட அன்புமணி, தமது அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு செப்டம்பர் 5-ந் தேதி அழைப்பு விடுத்துள்ளார். அன்றைய தினமே அன்புமணி பாமகவின் தலைமை நிர்வாகக் குழு கூட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
தற்போது, தமக்கு அவகாசம் மட்டுமே ராமதாஸ் தந்துள்ளதால், செயல் தலைவர் பதவியில் இருந்து தம்மை நீக்கினால் அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பாக செப்டம்பர் 5-ந் தேதி நடைபெறும் மா.செ.க்கள் கூட்டத்தில் அன்புமணி ஆலோசனை நடத்த இருக்கிறாராம்.