ராமதாஸ் வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவி- போலீஸ் விசாரணை தொடக்கம்

Published On:

| By Mathi

Ramadoss Anbumani

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவி கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக கிளியனூர் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். Spy Ramadoss PMK

டாக்டர் ராமதாஸின் தைலாபுரம் தோட்டத்து வீட்டில், ஒட்டு கேட்பு கருவி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து விழுப்புரம் எஸ்பி சரவணன் ஐபிஎஸ் மற்றும் கிளியனூர் இன்ஸ்பெக்டர் கலையரசி ஆகியோரிடம் பாமக தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன் ஒரு புகார் மனு கொடுத்திருந்தார்.

ADVERTISEMENT

அந்தப் புகார் மனுவில், பாமக நிறுவனர்- தலைவர் டாக்டர் ராமதாஸின் அலுவலக இல்லத்தில் கடந்த ஜூலை 9-ந் தேதி இரவு 6.30 மணியளவில் ஒட்டு கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததை அலுவலகப் பணியாளர்களும் உறவினர்களும் கண்டுபிடித்தனர். அலுவலக நாற்காலிகளை சுத்தம் செய்த போது இந்த ஒட்டு கேட்பு கருவி கண்டுபிடிக்கப்பட்டது. இது பற்றி எனக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து எங்களது கட்சி தொண்டர்கள் அங்கு சென்று பார்த்த போது, பாமக நிறுவனர் ராமதாஸ் வழக்கமாக அமரும் இருக்கையில் (சோபா) அந்த கருவி பொருத்தப்பட்டிருந்ததை உறுதி செய்தனர்.

இதனால் எங்கள் கட்சி நிறுவனர்- தலைவர் இல்லத்தில் முழுமையாக சோதனை நடத்தி, வேறு இடங்களில் இத்தகைய ஒட்டுக் கேட்பு கருவிகளை சமூக விரோதிகள் ரகசியமாக பொருத்தி இருக்கின்றனரா? என்பதை கண்டுபிடித்து தர வேண்டும். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, சட்டப்பூர்வமான நடவடிக்கையை விரைவாக மேற்கொள்ள வேண்டும்; மேலும் பாமக நிறுவனர் தலைவர் ராமதாஸுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான போலீஸ் பாதுகாப்பும் வழங்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இதனடிப்படையில் இன்று ஜூலை 17-ந் தேதி கிளியனூர் இன்ஸ்பெக்டர் கலையரசி தலைமையிலான போலீசார், இந்த ஒட்டுக் கேட்பு கருவி தொடர்பான விசாரணையை தொடங்கி உள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share