சிவகாசி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நெல்லையில் இருந்து சிவகாசி வழியாக பெங்களூருக்கு (Nellai- Bengaluru) வரும் ஆகஸ்ட் 17-ந் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
சிவகாசி பொதுமக்கள், தூத்துக்குடியில் இருந்து சாத்தூர், விருதுநகர் வழியாக பெங்களூரு செல்லும் ரயிலைத்தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர். ஆனால் போதுமான இருக்கைகள் கிடைக்காமல் அவதிப்பட்டனர். இதனால் சிவகாசி வழியாக பெங்களூருக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கை.
இதன் முதல் கட்டமாக நெல்லையில் இருந்து ஆகஸ்ட் 17-ந் தேதி மாலை 4.20 மணிக்கு பெங்களூருக்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது. அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம், ஶ்ரீவில்லிப்புத்தூர், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர், மதுரை, திண்டுக்கல் வழியாக ஆகஸ்ட் 18-ந்தேதி பிற்பகல் 12.30 மணிக்கு பெங்களூருக்கு இந்த சிறப்பு ரயில் சென்றடையும்.
பெங்களூருவில் இருந்து ஆகஸ்ட் 18-ந் தேதி பிற்பகல் 2.15 மணிக்குப் புறப்பட்டு, காலை 6 மணிக்கு சிவகாசிக்கு இந்த சிறப்பு ரயில் வந்தடையும்; நெல்லை ரயில் நிலையத்தை காலை 10.15 மணிக்கு இந்த ரயில் சென்றடையும்.
சிவகாசி வழியே செல்லக் கூடிய பெங்களூரு சிறப்பு ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்பது சிவகாசி மக்களின் கோரிக்கை.