எஸ்.வி.ராஜதுரை
டெல்லி அம்பேத்கர் பல்கலைக்கழகப் பேராசிரியரும் என் நண்பருமான ரவிச்சந்திரனிடமிருந்து கடந்த 26.07.2022 பிற்பகல் அதிர்ச்சி தரும் செய்தியொன்று வந்தது. ‘சக்ஸ்’ என்று அவரது நண்பர்களாலும், குடும்ப உறுப்பினர்களாலும், தமிழ் இலக்கிய, ஊடக உலகத்தையும் பல்வேறு பல்கலைக் கழகத்திலுள்ள கல்விப்புலம் சார்ந்த அறிவாளிகளாலும் அன்போடு அழைக்கப்பட்டு வந்த வெங்கடேஷ் சக்கரவர்த்தி காலமாகிவிட்டார் என்ற துக்கச் செய்தியைக் கேட்டதும் என்னால் நாள் முழுக்க நிலைகொள்ள முடியவில்லை, இரவில் ஒரு நொடிகூடத் தூங்க முடியவில்லை.

அவரும் அவரது துணைவியார் பிரீத்தமும் பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தவர்கள் என்றாலும், பார்ப்பனியத்தைக் கடுமையாக விமர்சித்து ஒதுக்கியதுடன் சாதியற்ற, சாதி என்பதைக் கனவிலும்கூடக் கருதிப் பார்க்காத இணையர்களாகவே வாழ்ந்தனர். தன் முன்னோர்களிளொருவர் அராபியப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டவர் என்பதால், தன் உடலில் அராபிய இரத்தமும் ஓடுகிறது என்று சக்ஸ் அவ்வப்போது நகைச்சுவையோடு கூறுவார்.
அவரது குடும்பமே ஒரு கலைக் குடும்பம். அவரது தாயார் அற்புதமான குணச்சித்திர நடிகராக ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். வாழ்க்கையின் பெரும் பகுதியில் சக்ஸுக்குப் போதுமான வருமானம் இருந்ததில்லை. அந்தக் குறையை நாடக இயக்குநராகவும் திரைப்பட நடிகராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கும் அவரது துணைவியார் ஈட்டிய வருமானம் ஓரளவு ஈடுசெய்து வந்தது.
கையில் காசிருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர்களது விருந்தோம்பலுக்கு ஒருபோதும் குறைச்சல் இருந்ததில்லை. அவர்களது இல்லம் எப்போதுமே ‘திறந்த வீடு’தான். அங்கு வந்து இளைப்பாறியும் விருந்துண்டும், அறிவுச்செல்வத்தை அள்ளிச் சென்றும் பயனடைந்தவர்களின் எண்ணிக்கையை அளவிட முடியாது.

ஏறத்தாழ 40 ஆண்டுக்கால நண்பராக இருந்த அவர், பத்தாண்டுக் காலம் என் அண்டை வீட்டுக்காரராகவும் இருந்திருக்கிறார். 1980களிலேயே சமூகவியல், மெய்யியல், மொழியியல் போன்ற துறைகளில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியிருந்த விட்கென்சஸ்டைன், ஸாஸூர், க்ளோட் லெவி-ஸ்ட்ராஸ், ஃபூக்கோ போன்றவர்களின் சிந்தனைகளை ஒரு பள்ளி மாணவனுக்கும்கூட விளங்கும்படியாக எடுத்துச் சொல்லும் பேராற்றல் பெற்றிருந்தவர் சக்ஸ்.
இடதுசாரி மனப்பான்மை கொண்டிருந்த அவர், மார்க்ஸியம் பற்றி எழுதவோ, பேசவோ செய்ததில்லை என்றாலும் ‘அமைப்பியல் மார்க்ஸியத்தின் தந்தை’ எனக் கருதப்படும் அல்துஸ்ஸெவைப் பற்றி அவ்வளவு அழகாக எடுத்துரைப்பார். ‘ரஷியப் புரட்சி: இலக்கியச் சாட்சியம்’ நூலை நான் எழுதுகையில் உலகப் புகழ்பெற்ற மொழியியலாளரும் இலக்கிய விமர்சகருமான எம்.எம். பாக்தின், ‘மொழி என்பதும்கூட வர்க்கப் போராட்டக் களங்களிலொன்று’ என்று கூறியிருந்ததை அவரிடம் ஒருமுறை சொல்ல, பாக்தினைப் பற்றிப் பல மணி நேரம் எனக்கு வகுப்பெடுத்தார்.
இணையத்தளங்களோ, வலைதளங்களோ, இன்டெர்நெட்டோ இல்லாதிருந்த காலத்திலும் உலகிலுள்ள பல்வேறு அறிவுச் செல்வங்கள் அவரிடத்தில் குவிந்து கிடந்தன. இப்போது சமூக ஊடகங்களில் தங்கள் மேதாவிலாசத்தைப் பற்றிப் பீற்றிக்கொள்ளும் பலரைப் போல அல்லாமல், தன்னிடமிருந்த அறிவு வளத்தை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பாதவர். ‘குடத்திலிட்ட விளக்காக’ வே வாழ்ந்து மறைந்த அவரோடு உரையாடி மகிழ்ந்தவர்கள் பாக்கியவான்கள்.
சென்னை லயோலாக் கல்லூரி, ஹைதராபாத்திலுள்ள ஒரு புகழ்பெற்ற நிறுவனம் முதலியவற்றில் ‘விஷுவல் கம்யூனிகேசன்’ துறையில் எண்ணற்ற மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பவராக, திரைப்பட விமர்சகராக, இசை ரசிகராக விளங்கி அவர்களைப் பன்முக ஆளுமை கொண்டவர்களாக்கியவர்.

சென்னையில் சிவகுமார், திரைப்பட இயக்குநர் ஹரிஹரன் ஆகியோரோடு இணைந்து 1980களில் ‘சென்னை ஃபிலிம் சொசைட்டி’யைத் திறம்பட நடத்தி வந்த சக்ஸ், அந்த அமைப்பால் திரையிட்டுக் காட்டப்படும் இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆசிய, ஆப்பிரிக்கத் திரைப்படங்களை அந்தச் சொசைட்டியின் உறுப்பினர்களோ வருகையாளர்களோ பார்த்து மகிழச் செய்ததுடன், திரைப்படங்களிலுள்ள அத்தனை நுணுக்கங்களையும் – நடிப்பு, இசை, கேமரா கோணம், ஷாட்டுகள் எனச் சினிமாக் கலையின் அனைத்துக் கூறுகளையும் அற்புதமாக எடுத்துக் கூறுவார்.
அவருக்கும் ஹரிஹரன், சிவகுமார் போன்றவர்களுக்கும் நடக்கும் விவாதங்களை வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தவர்களில் நானுமொருவன். எங்களைப் போன்றோருக்கு அவர் அறிமுகப்படுத்திய உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ண முடியாது.
செக் இயக்குநர் யிர் மென்ஸிலின் Closely Watched Train, ஆண்ட்ரே வாய்டாவின் Ashes and Diamonds, ஃபிரான்ஸுவா த்ருஃபோவின் The Last Metro, மார்கரெட்டா வான் ட்ரோட்டாவின் Rosa Luxumburg, ஆண்ட்ரே தார்கோவ்ஸ்கியின் solar என உலகத் திரைப்பட வானில் ஒளிர்ந்துகொண்டிருந்த திரைப்படங்களைப் பற்றியும் அவற்றின் பின்னணிகளைப் பற்றியும் அவரைப் போல அழகியல் உணர்வோடும் ஆழ்ந்த ரசனையோடும் எடுத்துச் சொன்னவர்கள் மிக அரிது. நான் நடத்தி வந்த ‘இனி’ இதழுக்குக் கட்டுரைகள் எழுதித்தந்து என்னைக் கௌரவப்படுத்தியவர்.

தமிழகத்திலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் மட்டுமல்லாது உலகின் பல்வேறு பகுதிகளிலுள்ள எழுத்தாளர்கள், அறிஞர்கள், வாசகர்கள், நண்பர்கள் ஆகியோர்தான் சக்ஸ் திரட்டி வைத்த ஒரே சொத்து. தமிழ் அறிவுலகத்தில் பாடல் பெறாத, உரிய அங்கீகாரம் பெறாத, அதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாத மாமனிதர் அவர். மிக அடக்கமான மனிதர். எதிலும் சமரசம் செய்துகொள்ளாத அவர் சட்டென்று கோபப்படுவார். ஆனால் அது சில நொடிகளில் மறைந்து விடும். மன்னிக்கும் மனப்பான்மை கொண்டவர். அவரது முகத்தை எப்போதும் அலங்கரித்து வந்த தாடியும் அவரது புன்னகையும் மறக்க முடியாதவை.
கட்டுரையாளர் குறிப்பு:

எஸ்.வி.ராஜதுரை மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்
நன்றி : உயிர் எழுத்து