வட இந்தியாவில் கொண்டாடப்படும் சாத் பூஜையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி புனித நீராடுவதற்கு யமுனை நதியின் அருகே புதியதாக குளம் உருவாக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
வட இந்தியர்கள் சாத் அல்லது சத் பண்டிகை நாளில் நீர்நிலைகளில் புனித நீராடுவர். அன்றைய தினம் அதிகாலையில் நீர்நிலைகளில் நீராடி சூரியனை வழிபடுவது வழக்கம். பீகார் மாநிலத்தில் இந்த வழிபாடு மிக முக்கியமானது.
பீகாரில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பீகார் மக்களின் சாத் பூஜையில் பங்கேற்கும் மோடி, யமுனை நதியில் நீராடுகிறார். ஆனால் டெல்லியில் ஓடும் அசுத்தமான யமுனை நதியில் அல்ல.. யமுனை நதியின் ஓரமாக பிரம்மாண்டமாக வெட்டப்பட்டுள்ள புதிய குளத்தில்தான் பிரதமர் மோடி புனித நீராடுகிறார். மோடி நீராடுவதற்காக சுத்திகரிக்கப்பட்ட நீர், குளம் முழுவதும் நிரப்பப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாகி உள்ளது. நாட்டு மக்கள் அசுத்தமான யமுனை நதியில் நீராட, பிரதமர் மோடிக்கு மட்டும் பிரத்யேகமான தனி குளம் வெட்டுவதா? என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சமூக வலைதளங்களிலும் இது தொடர்பான படங்கள் பகிரப்பட்டு விவாதங்கள் நடைபெறுகின்றன.
