சிறப்பு பொதுக்குழு திருப்பு முனையாக இருக்கும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஆகஸ்ட் 14) தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, அவர், புதுச்சேரி அருகேயுள்ள பட்டானூரில் வருகின்ற 17 ஆம் தேதி நடைபெறும் சிறப்பு பொதுக்குழு வரலாற்று சிறப்புமிக்க பொதுக்குழுவாகவும், யாரும் நடத்தாத வகையில் நடைபெற உள்ளதாகவும் கூறினார்.
மேலும் அவர், “அம்பேத்கர் குறித்த 17 தொகுதிகளை உள்ளடக்கிய நூலினை வெளியிட்ட அமைச்சர் சாமிநாதனை பாராட்டுகிறேன். இதுபோன்று தமிழக அரசு தொடர்ந்து வெளியிட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “ சமூக வலைதளங்களில் தன்னை பற்றி கேவலமாக பேசுபவர்கள் பேசிவிட்டு போகட்டும். கெளரவ தலைவரை ஒருகும்பல் திட்டமிட்டு அவதூறாக பதிவிடுகிறது.
அப்படி பதிவிடுபவர்களுக்கு பணம் கொடுத்து போட சொல்லுவதாக செய்திகள் வருகிறது. தூற்றூவோர் தூற்றட்டும் போற்றுவோர் போற்றட்டும் ஏற்றதோர் கருத்தை உள்ளம் ஏற்றால் எதற்கும் அஞ்சேன்.
தன்னை பற்றி அவதூறாக பேச பணம் கொடுக்கிறார்கள் என்றால் நாம் எங்கே செல்கிறோம் என்று தோன்றுகிறது. இதனால் பயணத்தை நிறுத்த போவதில்லை. மக்களுக்காக போராட வேண்டியது நிறைய உள்ளது.
அவதூறாக பேசுபவர்கள் பதர்களாக உள்ளவர்களுக்கு மக்கள் தக்க பதில் அடி கொடுப்பார்கள். பாலு போன்றவர்களுக்கு பதில் அளிக்க விருப்பமில்லை .பொய் பொய்யாக பேசுபவர்களுக்கு பதில் கூறுவது என்னுடைய தரத்திற்கு ஏற்றது இல்லை.
சிறப்பு பொதுக்குழு திருப்பு முனையாக இருக்கும்” என்று குறிப்பிட்டார்.
ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.