கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் அறிமுகக் கூட்டம், சுங்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தே.ஜ.கூட்டணி கட்சியினர் இதில் கலந்துகொண்டனர்.
அற்புதமான கூட்டணி
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, “கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி ஒரு விஐபி தொகுதியாக மாறிவிட்டது. ஆனால் அம்மன் அர்ஜுனன் எப்போதும் போலவே இருக்கிறார். அற்புதமான கூட்டணி நமக்கு அமைந்துள்ளது. யார் வந்தாலும் கவலை இல்லை. அம்மன் அர்ஜுனன் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது” என்றார்.
மேலும், “தெற்கு தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனனை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.ங
இந்தியா முழுவதும் 100 ஸ்மார்ட் சிட்டிகளில் கோவை உள்பட 11 ஸ்மார்ட் சிட்டிகள் தமிழகத்தில் அதிமுக ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டன என்று கூறிய வேலுமணி, தெற்கு தொகுதியில் செய்த பணிகளைப் பட்டியலிட்டார். “திமுக எந்தத் திட்டத்தையும் கொண்டுவரவில்லை. நமது திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டி திறந்து வைத்துள்ளது. திமுகவினர் எதுவும் செய்யாமல் ஐந்து ஆண்டுகளை முடித்துள்ளனர். சொத்து வரி, பால் விலை, மின்கட்டணம் போன்றவை உயர்த்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கஞ்சா நடமாட்டம் அதிகரித்துள்ளது” என்று திமுக மீது குற்றம் சாட்டினார்.
மானப் பிரச்சனை
மேலும், “கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 21 தொகுதிகளுக்கு நான் பொறுப்பாளர். இந்தத் தொகுதிகளில் நாம் வெல்வோம். எதற்கெடுத்தாலும் பாஜகவை உள்ளே விடமாட்டோம் என்கின்றனர். தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும் போட்டி என்கின்றனர். மத்திய அரசு தமிழகத்திற்கு அதிகமான திட்டங்களை கொடுத்துள்ளது. எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை கூறுகின்றனர். மத்திய அரசிடம் அதிமுக ஆட்சி அமைந்த பிறகு ஏராளமான திட்டங்களை கேட்டுப் பெறுவோம்” என்றார்.
கோவைக்கு ஏதாவது செய்தோம் என்று செந்தில் பாலாஜியால் சொல்ல முடியுமா? என்று கேள்வி எழுப்பிய வேலுமணி, “இன்னும் 20 நாட்கள் சுழன்று பாடுபட வேண்டும். கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்ல வேண்டும். ஒரே குடும்பமாக செயல்பட வேண்டும். கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் கேட்பதை செய்து தர வேண்டும். இது நமது மானப் பிரச்சினை. 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் கோவை தெற்கு தொகுதியில் அம்மன் அர்ஜுனன் வெற்றி பெறுவார். கவுண்ட் டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது” எனவும் தெரிவித்தார்.
மேலும், “திமுகவினர் கோவையில் உள்ளாட்சித் தேர்தலில் கொலுசை காட்டி ஏமாற்றினார்கள். இப்போது கோவை மாநகராட்சி கேவலமான நிலையில் உள்ளது. அதிமுக ஜெயித்தவுடன் திமுகவினர் காணாமல் போய்விடுவார்கள். என்டிஏ அடுத்து உள்ளாட்சித் தேர்தலிலும் ஒற்றுமையாக இருந்து பாடுபடுவோம்” என்றார்.
