தமிழ்நாடு சிறப்பு காவல் படை 4-வது பட்டாலியனில் பணியாற்றி வந்த பெண் காவலர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், எஸ்.பி. அந்தஸ்திலான கமாண்டர் செந்தில்குமார் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை புதூர் பகுதியில் தமிழ்நாடு சிறப்புக்காவல் படையின் 4-வது அணி செயல்பட்டு வருகிறது. இங்கு காவலர் பணிக்குத் தேர்வு செய்யப்படும் ஆண் மற்றும் பெண் காவலர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்த பயிற்சி மையத்தின் கமாண்டராகப் பணியாற்றி வந்தவர் எஸ்.பி. செந்தில்குமார்.
செந்தில்குமார் அங்கு பணியாற்றி வந்த பெண் காவலர்களுக்குத் தொடர்ந்து பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து வந்ததாகப் புகார்கள் எழுந்தன. பாதிக்கப்பட்ட பெண் காவலர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த மாதம் அவர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டார். மேலும், இது குறித்துத் துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
உயர் அதிகாரிகள் நடத்திய துறை ரீதியான விரிவான விசாரணையில், செந்தில்குமார் பெண் காவலர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்று இரவு கோவை அனைத்து மகளிர் காவல்துறையினர் அவர் மீது நடவடிக்கை எடுத்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் காவலர்களின் புகாரின் பேரில், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், செந்தில்குமாரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
