பாஜகவின் புதிய தேசியத் தலைவர்.. நிர்மலா சீதாராமன்? வானதி சீனிவாசன்? புரந்தேஸ்வரி?

Published On:

| By Mathi

BJP National President

பாஜகவின் புதிய தேசியத் தலைவராக பெண் ஒருவர் நியமிக்கப்படலாம் என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆந்திரா முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் மகள் புரந்தேஸ்வரி மற்றும் பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவரும் தமிழக சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Nirmala Sitharaman Purandeswari Vanathi Srinivasan

பாஜகவில் தேசியத் தலைவர் பதவிக் காலம் 3 ஆண்டுகள். தற்போதைய தலைவர் ஜேபி நட்டா, 2020-ம் ஆண்டு பாஜகவின் தேசியத் தலைவரானார். 2023-ம் ஆண்டு ஜேபி நட்டாவின் பதவி காலம் முடிவடைந்தது. ஆனாலும் 2024 மக்களவைத் தேர்தலுக்காக ஜேபி நட்டாவின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டது. தற்போது மாநிலங்களவை எம்பியான ஜேபி நட்டா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும் பதவி வகிக்கிறார்.

இதனையடுத்து பாஜகவின் புதிய தேசியத் தலைவர் விரைவில் நியமிக்கப்பட இருக்கிறார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் தீவிர ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர். மேலும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் பாஜகவின் புதிய தேசியத் தலைவர் குறித்து ஆராய்ந்து வருகிறது.

இந்த பின்னணியில் இம்முறை பாஜகவின் தேசியத் தலைவராக பெண் ஒருவரை நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாஜகவின் தேசியத் தலைவராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டால் அக்கட்சியில் தற்போது 3 பேருக்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக சட்டமன்ற உறுப்பினரும் பாஜகவின் தேசிய மகளிர் அணித் தலைவருமான வானதி சீனிவாசன் மற்றும் ஆந்திரா முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் மகள் புரந்தேஸ்வரி எம்.பி ஆகிய மூன்று பேரில் ஒருவர் பாஜகவின் தேசியத் தலைவராக நியமிக்கப்படலாம் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


நிர்மலா சீதாராமன்

தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்; ஆந்திராவில் திருமணம் செய்தவர்; கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2019-ம் ஆண்டு முதல் மத்திய நிதி அமைச்சராக பதவி வகித்து வருகிறார். நிர்மலா சீதாராமனை பாஜகவின் தேசியத் தலைவராக நியமிப்பதன் மூலம் தென்னிந்தியாவில் பாஜகவை வலுப்படுத்த முடியும் என்பது சில மூத்த தலைவர்களின் கருத்து. அண்மையில் ஜேபி நட்டா, பாஜக தேசிய பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் உள்ளிட்டோரை பாஜக டெல்லி தலைமையகத்தில் நிர்மலா சீதாராமன் சந்தித்து ஆலோசனையும் நடத்தியிருந்தார். இதனால் பாஜகவின் புதிய தேசியத் தலைவராக நிர்மலா சீதாராமனை நியமிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்கின்றனர் பாஜக நிர்வாகிகள்.


புரந்தேஸ்வரி

ஆந்திரா முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் மகள் புரந்தேஸ்வரி எம்பி (ஆந்திரா ராஜமுந்திரி தொகுதி). பாஜகவின் ஆந்திரா மாநில தலைவராக பதவி வகித்தவர். 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் மக்களவைத் தலைவர் (சபாநாயகர்) பதவிக்கு புரந்தேஸ்வரி பெயரும் அடிபட்டது. அண்மையில் வெளிநாடுகளுக்கு சென்ற ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான மத்திய அரசின் குழுவில் இடம் பெற்றிருந்தவர். புரந்தேஸ்வரியின் சகோதரி புவனேஸ்வரிதான், ஆந்திரா முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் மனைவி. தற்போது பாஜகவின் தேசியத் தலைவர் போட்டியில் புரந்தேஸ்வரி பெயரும் இடம் பெற்றுள்ளது.

வானதி சீனிவாசன்

தமிழகத்தில் நன்கு அறியப்பட்ட பாஜக தலைவர்களில் ஒருவர். தமிழக பாஜக முகங்களில் ஒருவர். பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவராக பதவி வகிக்கிறார். 2021-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசனை தோற்கடித்தவர். 1990களில் இருந்து பாஜகவில் பயணிக்கும் வானதி சீனிவாசன் 2022-ல் பாஜகவின் மத்திய தேர்தல் குழுவிலும் இடம் பெற்றிருந்தார். தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் வாக்காளர்களின் கவனத்தை பெறும் வகையில் வானதி சீனிவாசனை பாஜகவின் தேசிய தலைவராக நியமித்தாலும் ஆச்சரியமில்லைதான் என்கின்றனர் பாஜக மூத்த தலைவர்கள்.

படம்: ஜனா கிருஷ்ணமூர்த்தி, பாஜக முன்னாள் தேசியத் தலைவர்


தமிழகத்துக்கு மீண்டும் பாஜகவின் தேசிய தலைவர் பதவி?

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி ஓராண்டு காலம் மட்டும் பாஜகவின் தேசியத் தலைவராக 2001- 2002-ம் ஆண்டு பதவி வகித்தார். மேலும் பாஜகவின் தேசிய பொறுப்புகளில் தமிழ்நாட்டு பாஜக தலைவர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த முறை தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் அல்லது வானதி சீனிவாசன் ஆகியோருக்கு பாஜகவின் தேசியத் தலைவராகும் வாய்ப்பு கிடைக்குமா? தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நிர்மலா சீதாராமன் அல்லது வானதி சீனிவாசனை தேசியத் தலைவராக நியமிக்குமா பாஜக? என்பது எதிர்பார்ப்பு.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share