லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்; பழங்குடி மக்களுக்கு சுயாட்சி கவுன்சில் அமைக்க அரசியல் சாசனத்தின் 6-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்திய சூழலியல் ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து பிரித்து லடாக், யூனியன் பிரதேசமாக்கப்பட்டது. தற்போது லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கோரியும் லடாக் பழங்குடிகளுக்கு சுயாட்சி நிர்வாக அமைப்புகளை உருவாக்க கோரியும் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.
சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் அண்மையில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் கடந்த புதன்கிழமை மிகப் பெரும் வன்முறை வெடித்தது. லடாக்கில் பாஜக தலைமை அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது. போலீசார் நடத்திய தாக்குதல்களில் 4 பேர் பலியாகி உள்ளனர்.
மேலும் நேபாளத்தைப் போல லடாக்கிலும் Gen Z போராட்டம் தொடங்கிவிட்டதாக சோனம் வாங்சுக் பிரகடனம் செய்திருந்தார். இந்த நிலையில் சோனம் வாங்சுக் இன்று (செப்டம்பர் 26) அதிரடியாக கைது செய்யப்பட்டார். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டுள்ளார்.