தமிழ்நாட்டில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் தாயுமானவர் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 12) தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.
இந்த நிலையில் இத்திட்டம் குறித்து தமிழக நியாயவிலை கடை ஊழியர்கள் சங்கத்தின் மாநில ஜெயச்சந்திர ராஜாவிடம் தொடர்பு கொண்டு பேசினோம்.
அப்போது அவர், “இத்திட்டம் வரவேற்க கூடியது தான். அதே நேரத்தில் இத்திட்டத்தில் சில நடைமுறை சிக்கல்களும் உள்ளன.
வீடு தேடி ரேசன் அரிசி வழங்கும் இத்திட்டத்தில் முக்கிய தகுதியாக கணவர், மனைவி இருவரும் 70 வயது கடந்திருக்க வேண்டும்.
ரேசன் அட்டை வைத்திருக்கும் ஒரு குடும்பத்தில் கணவருக்கு 71 வயது, மனைவிக்கு 69 வயதாக இருந்தால் அந்த வீடு தேடிச் சென்று ரேசன் அரிசி வழங்க முடியாது.
தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 34 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளது. அரசு குறிப்பிட்ட தகுதியின் படி பார்த்தால், ஒரு ரேசன் கடைக்கு குறைந்தபட்சம் 3 முதல் அதிகபட்சமாக 100 குடும்பம் வரை பயன்பெறும்.
அத்தனை பேருக்கும் ரேசன் பொருட்கள் சப்ளை செய்ய வேண்டுமென்றால் லாரியில் தான் எடுத்துக்கொண்டு செல்ல முடியும். ஆனால் குறைந்த வாடகை தருவதால் அவர்கள் தொடர்ந்து வர முடியாது என்கிறார்கள்.
மேலும் ரேசன் கடையில் ஏற்கெனவே ஊழியர்கள் தட்டுபாடு உள்ளது. தற்போது நேரில் சென்று பொருட்களை சப்ளை செய்ய வேண்டுமென்றால் எங்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளது. மேலும் இருக்கிற ஊழியர்களை கொண்டு எடை மெஷின், அளவீட்டு பொருட்கள் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு வீடு தேடி சென்றால், கடையை அடைத்துவிட்டு தான் செல்ல முடியும். இது கடையில் வந்து ரேசன் பொருட்களை வாங்க வரும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும்.
இந்த நிலையில் திருச்சியில் நாளை நியாயவிலை கடை ஊழியர்கள் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளோம். அதில் இச்சிக்கல்களுக்கு என்ன தீர்வு என்பது குறித்து கலந்தாலோசிப்போம்” எனத் தெரிவித்தார்.