எந்த தொழிலானாலும் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் சம்பாதிப்பது பலரால் உற்றுநோக்கப்படும். அந்த வகையில், குறைந்த பட்ஜெட்டில் தயாராகிற படங்கள் திரையுலகில் வியக்கத்தக்க லாபத்தை ஈட்டுவது புதிதல்ல. பஞ்சதந்திரம் படத்தில் தெலுங்கு நடிகர் சத்யநாராயணா ’சின்ன கல்லு பெத்த லாபம்’ என்று சொல்வது, இன்று இப்படியான சந்தர்ப்பங்களில் ‘மேற்கோள்’ காட்டப்படுகிறது. அப்படியொரு வெற்றியைப் பெற்றிருக்கிறது சமீபத்தில் வந்திருக்கிற கன்னடப் படமான ‘சு ஃப்ரம் சொ’.
சிறப்பான திரைக்கதையும் காட்சியாக்கமும் கூடவே திட்டமிடப்பட்ட சந்தைப்படுத்துதலும் இருந்தால், எவ்வளவு சிறிய படமும் நல்லதொரு கவனத்தைப் பெறும் என்பதற்கு இன்னொரு உதாரணமாகி இருக்கிறது.
கன்னடத் திரையுலகின் குறிப்பிடத்தக்க நாயகனாக, இயக்குனராக, தயாரிப்பாளராக விளங்குகிற ராஜ் பி ஷெட்டி இப்படத்தின் வெளியீட்டில் உறுதுணையாக இருந்திருக்கிறார். இப்படத்தில் கௌரவமாகத் தலைகாட்டியிருக்கிறார்.
’சுலோசனா ஃப்ரம் சோமேஷ்வரா’ எனும் தலைப்பின் சுருக்கமே ‘சு ஃப்ரம் சோ’. கர்நாடகாவின் வட பிரதேசத்தில் இருக்கிற ஒரு சாதாரண கிராமத்தில் நிகழ்கிற ‘ஹாரர்’ விஷயங்களைப் பேசுகிறது இப்படம்.
மேற்சொன்ன டைட்டிலையும் வகைமையும் இணைத்துப் பார்த்தால், ஒரு ஆணைப் பெண் பேய் ஆட்டுவித்தால் என்னவாகும் என்ற கதை மனதுக்குள் தோன்றக்கூடும். கிட்டத்தட்ட அதே தொனியில் கதை சொல்கிறதாம் இப்படம்.
ஜே.பி.துமிநாட் இயக்கியுள்ள இப்படத்தில் ஷனில் கௌதம், ஜே.பி.துமிநாட், சந்தியா அரகரே, பிரகாஷ் துமிநாடு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படம் முழுக்கச் சிரிக்கும் வகையில் இதன் காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருப்பதும், வட கர்நாடகப் பகுதியின் இயற்கை அழகைக் காட்டியிருப்பதும், பெண்கள் மீதான சமூகத்தின் அடக்குமுறையை அடிக்கோடிட்டுச் சொல்லியிருப்பதும் இதர பல அம்சங்களும் இப்படத்தின் வெற்றிக்குக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.
‘காந்தாரா’ வெற்றியை மனதில் கொண்டு, இப்படத்தை உடனடியாக மலையாளத்தில் ‘டப்’ செய்து வெளியிடுகிறது துல்கர் சல்மானின் ‘வேஃபேரர் பிலிம்ஸ்’.
கூடிய விரைவில் இதன் தமிழ் பதிப்பும் வரும் என்று எதிர்பார்க்கலாம்.