இன்ஸ்டாகிராம் ரீல்ஸைத் திறந்தாலே எல்லோரும் “ஸ்கின் பேரியர் ரிப்பேர்” (Skin Barrier Repair) பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். திடீரென்று ஏன் இந்த வார்த்தை இவ்வளவு பிரபலமானது? இத்தனை நாள் முகம் பளபளக்க வேண்டும் என்று நாம் பயன்படுத்திய பலவிதமான க்ரீம்களும், ஆசிட்களும் (Acids) நம் தோலை எப்படிப் பாதித்துள்ளன என்பதன் எதிரொலிதான் இது.
‘ஸ்கின் பேரியர்‘ என்றால் என்ன? மிக எளிதாகச் சொன்னால், இது உங்கள் சருமத்தின் ‘பாதுகாப்பு சுவர்’. உங்கள் தோலின் வெளிப்புற அடுக்கில் உள்ள செல்கள் மற்றும் கொழுப்புகள் (Lipids) இணைந்து ஒரு சுவர் போலச் செயல்பட்டு, ஈரப்பதத்தை உள்ளே தக்கவைக்கவும், கிருமிகள் மற்றும் தூசியை உள்ளே வராமல் தடுக்கவும் உதவுகிறது. இந்தச் சுவர் வலுவாக இருந்தால் தான் முகம் ‘கிளாஸ்’ (Glass Skin) போல ஜொலிக்கும்.
உங்க ஸ்கின் பேரியர் டேமேஜ் ஆகிவிட்டதா? – அறிகுறிகள்: கீழே உள்ள அறிகுறிகள் இருந்தால், உங்கள் சருமத்தின் பாதுகாப்பு அரண் உடைந்துவிட்டது என்று அர்த்தம்:
- எரிச்சல்: வழக்கமாகப் பயன்படுத்தும் மாய்சரைசர் அல்லது சாதாரணத் தண்ணீர் பட்டாலே முகம் சுரீரென்று எரியும்.
- சிவத்தல் (Redness): முகம் எப்போதும் சிவந்துபோய்க் காணப்படும்.
- வறட்சி மற்றும் எண்ணெய்: முகம் மிக வறட்சியாகவும் இருக்கும், அதே சமயம் எண்ணெய் வழியும்.
- திடீர் பருக்கள்: எந்தக் காரணமும் இல்லாமல் திடீரெனப் பொறிபொறியாகப் பருக்கள் வரும் (Breakouts).
ஏன் பாதிக்கப்படுகிறது? அதிகப்படியான ‘ஸ்க்ரப்’ (Over-exfoliation) செய்வது, ரெட்டினால் (Retinol), கிளைக்கோலிக் ஆசிட் போன்ற வீரியமிக்க வேதிப்பொருட்களைத் தினமும் பயன்படுத்துவது, மற்றும் வெந்நீரில் முகம் கழுவுவது ஆகியவைதான் முக்கியக் காரணங்கள். சுருக்கமாகச் சொன்னால், அளவுக்கு அதிகமான பராமரிப்பே (Over-skincare) ஆபத்தாக முடிந்துள்ளது.
சரி செய்ய எளிய வழிமுறைகள் (Simple Routine): பயப்பட வேண்டாம், இதைச் சரிசெய்வது மிக எளிது. ஆனால் பொறுமை அவசியம்.
- எல்லாவற்றையும் நிறுத்துங்கள்: முதலில் உங்கள் முகத்தைப் பளபளக்க வைக்கும் சீரம் (Serum), டோனர், ஆசிட் என அனைத்தையும் 2 வாரங்களுக்கு ஓரம் வையுங்கள்.
- ஜென்டில் கிளன்சர் (Gentle Cleanser): சோப்புக்குப் பதிலாக, நுரை வராத க்ரீம் வகை ஃபேஸ் வாஷைப் பயன்படுத்துங்கள்.
- மாய்சரைசர் தான் மருந்து: ‘செராமைடு‘ (Ceramides), ஹைலூரோனிக் ஆசிட் (Hyaluronic Acid) அல்லது கிளிசரின் உள்ள கெட்டியான மாய்சரைசரைப் பயன்படுத்துங்கள். இது உடைந்த சுவரை மீண்டும் கட்டியெழுப்பும் சிமெண்ட் போலச் செயல்படும்.
- சன்ஸ்கிரீன் கட்டாயம்: வெயிலில் செல்லும்போது சன்ஸ்கிரீன் இல்லாமல் செல்லவே கூடாது.
இந்த “Less is More” (குறைவானதே சிறந்தது) ஃபார்முலாவைக் கடைப்பிடித்தால், இரண்டே வாரங்களில் உங்கள் சருமம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி, ஆரோக்கியமாக ஜொலிக்கும்!
