தர்மஸ்தலா கோயிலை சுற்றி 100-க்கும் மேற்பட்ட பெண்களின் சடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், இன்று (ஜூலை 31) 6வது இடத்தில் மனித எலும்பின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில் தர்மஸ்தலா. இக்கோயிலில் பணியாற்றிய முன்னாள் தூய்மைப் பணியாளர் கடந்த ஜூன் மாதம் 3ஆம் தேதி தட்சிண கன்னடா காவல்நிலையத்தில் சரணடைந்து அளித்த வாக்குமூலம், ஒட்டுமொத்த கர்நாடகாவையே கதிகலங்க வைத்தது.
அவர், ”1995-ஆம் ஆண்டிலிருந்து 2014-ஆம் ஆண்டு வரை, தர்மஸ்தலா கோவிலில் பல பெண்கள் மற்றும் மாணவிகளின் உடல்களை அடக்கம் செய்யச் சொல்லி, கோயில் நிர்வாகத்தினர் தன்னை கட்டாயப்படுத்தினர். உடல்களை புதைக்காவிட்டால் தன்னையும் குடும்பத்தினரையும் கொன்று விடுவதாக மிரட்டியன. இதனால் பல பெண்களை பள்ளி சீருடையிலேயே புதைத்தேன். அப்படி புதைக்கப்பட்ட பெண்களின் உடல்களில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அடையாளங்களும், சில நேரம் ஆசிட் தழும்புகளும் தென்பட்டிருந்தது” என்று கூறி ஒட்டுமொத்த கர்நாடகாவையும் அலற வைத்தார்.
மேலும் உயிர் பயத்தால் 10 ஆண்டுகளுக்கு முன் தர்மஸ்தலாவை விட்டு குடும்பத்துடன் வெளியேறி அண்டை மாநிலத்தில் மறைந்து வாழ்ந்ததாக குறிப்பிட்ட அவர் மனசாட்சி உறுத்தலால் இந்த உண்மைகளை தற்போது தெரிவித்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
ஜூலை 3 ஆம் தேதி அந்த நபர் தனது வழக்கறிஞர்கள் மூலம் தர்மஸ்தல காவல் நிலையத்தில் புகார் அளித்தார், மறுநாள் போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். ஜூலை 11 ஆம் தேதி பெல்தங்கடி நீதிமன்றம் BNSS இன் பிரிவு 183 இன் கீழ் அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்தது, அதன் பிறகு புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் இடங்களுக்கு புலனாய்வாளர்களை வழிநடத்த அவர் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, அவர்மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், கடந்த 11ஆம் தேதி அவரை பெல்தங்கடி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது BNSS இன் பிரிவு 183 இன் கீழ் அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்யப்பட்டது.
அனுசேத் தலைமையில் கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வு குழு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
அவரது முன்னிலையில் கடந்த 29ஆம் தேதி முதல் தர்மஸ்தாலவின் தர்மஸ்தலா நேத்ராவதி கரை அருகே உள்ள காட்டுக்கு அருகில் உடல்களை தோண்டி கண்டெடுக்கும் பணி தொடங்கியது. அங்கு புகார் அளித்த உடல்கள் புதைக்கப்பட்ட 13 இடங்களை அடையாளம் காட்டியுள்ளார்.
அவர் காட்டிய 2வது இடத்தில் 25 அடி ஆழம் வரை தோண்டிய போது சிவப்பு நிற ஜாக்கெட், ஒரு பான், ஏடிஎம் கார்டு கண்டெடுக்கப்பட்டன. இது வழக்கின் விசாரணையில் முக்கிய ஆதாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் மூன்றாவது நாளான இன்று அவர் காட்டிய 6வது இடத்தில் இன்று தோண்டியபோது, மனித எலும்பின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த எச்சங்கள் மூன்று அடி ஆழத்தில் கண்டெடுத்ததாகவும், எலும்புக்கூட்டின் எந்தப் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டன என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், ஆனால் அவை ஒரு ஆணுடையதாக இருக்கலாம் என எஸ்.ஐ.டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மூன்று நாட்களாக தோண்டும் பணி தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று மனித எலும்பின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது ஒரு பெரிய திருப்புமுனையாகும்.
தற்போது அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், 7வது இடத்தில் தோண்டும் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
அதேவேளையில் மீட்கப்பட்ட உடல் எச்சங்களை பாதுகாப்பாக ஆய்வுக்கு அனுப்பும் அணியை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மஸ்தலா கோயிலை சுற்றி பெண்களின் உடல்கள் புதைக்கப்பட்டிருப்பது உண்மையா? அதற்கு யார் காரணம்? அப்பெண்களுக்கு நேர்ந்தது என்ன? என பலரும் கேள்வி கர்நாடகாவில் காட்டுத்தீயாய் பரவியது. அப்போதுதான் மற்றொரு புகார் – வழக்கை விஸ்வரூபம் எடுக்க வைத்தது. 2003ஆம் ஆண்டு, தன்னுடை மகள் தர்மஸ்தலாவில் காணாமல் போனதாக, கடந்த 15-ஆம் தேதி, பெண் ஒருவர் தட்சின கன்னடாவின் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.
அதன் பின்னர் இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க, சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் எத்தனை பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதைக் கண்டறிய, அப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக காணாமல் போன பெண்களின் பட்டியலை சேகரிக்க தொடங்கினர்.