பல ஆண்டுகளாக இயல், இசை, நாடகக் கலைக்கு சேவை செய்த கலைஞர்களின் பங்களிப்பைப் பாராட்டி கலைமாமணி விருதை ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு வழங்கி வருகிறது. அதன்படி கடந்த 2021, 2022, 2023 என மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதினை தமிழக அரசு இன்று அறிவித்தது.
அடுத்த மாதம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.
திரையுலகை பொறுத்தவரை நடிகர் எஸ்.ஜே.சூர்யா, நடிகை சாய்பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன், கலை இயக்குநர் ஜெயக்குமார் ஆகியோருக்கு 2021 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டுக்காக நடிகர் விக்ரம் பிரபு, ஜெயா வி.சி.குகநாதன், பாடலாசிரியர் விவேகா, மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, புகைப்பட கலைஞர் டி. லட்சுமிகாந்தன் ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல் நடிகர்கள் மணிகண்டன், ஜார்ஜ் மரியான், இசையமைப்பாளர் அனிரூத், பாடகி ஸ்வேதா மோகன், சாண்டி மாஸ்டர், மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் ஆகியோருக்கு 2023 ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விருது அறிவிக்கப்பட்டுகள் கலைஞர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யா வெளியிட்டுள்ள பதிவில், ”என்னை கலைமாமணியாக தேர்ந்தெடுத்த தமிழக அரசு இயல், இசை நாடக மன்றத்திற்கும், இதுவரை துணை நின்ற அனைத்து திரைத்துறை நண்பர்களுக்கும், பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கும், என் அன்பும் ஆருயிருமான என் ரசிக பெருமக்களுக்கும், இந்த பட்டத்தை எனக்கு வழங்கும் தமிழக முதல்வர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு என் மனமார்ந்த அன்பையும் நன்றியையும் தெரிவிப்பதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் லிங்குசாமி அளித்த பேட்டியில், “இந்த விருது தமிழ்நாடு அரசு சார்பாக வழங்கும் அன்னையின் முத்தம் என நினைத்துக் கொள்ளுங்கள் என்று கலைஞர் கட்டுரை எழுதி இருந்தார். அந்த எழுத்து என் மனதில் எப்போதும் இருக்கும். எனது திரையுலக பயணத்தில் கூடவே இருந்த நடிகர்கள், நண்பர்கள் குடும்பம், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருது மூலம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என தோன்றியுள்ளது” என லிங்குசாமி பேசினார்.
அதே போல பாடகி ஸ்வேதா மோகன் அளித்த பேட்டியில், “கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. தமிழக அரசுக்கு மிகப்பெரிய நன்றி. பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. என் அம்மாவுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த விருதை அளித்து கெளரவித்தார்கள். தற்போது நானும் இந்த விருதை பெறுவது பெருமையாக உள்ளது. இதற்கு எனது குருக்களுக்கும், குடும்பத்திற்கும், திரையுலகினருக்கும் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்” என தெரிவித்தார்.
மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாடு அரசின் பெருமைமிகு விருதான கலைமாமணி விருதுக்கு என்னை தேர்வு செய்ததற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு மு.பெ. சாமிநாதன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் நிர்வாகிகள் மற்றும் தேர்வு குழு உறுப்பினர்களுக்கும், எனக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், என் குடும்பத்தினர் மற்றும் உதவியாளர்கள் உள்ளிட்ட திரையுலகினருக்கும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கலைமாமணி விருது அளிக்கும் ஊக்கத்துடன் உங்கள் அனைவருடனும் இணைந்து தொடர்ந்து பயணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.