தலைநகர் டெல்லியில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (CII) மற்றும் மத்திய அரசு சார்பில் 6வது சர்வதேச எரிசக்தி மாநாடு மற்றும் கண்காட்சி இன்று (செப்டம்பர் 23) நடைபெற்றது.
அதில் ‘எல்லைகளுக்கு அப்பால்: புதிய எரிசக்தி சந்தைகளை உருவாக்குதல்’ என்ற தலைப்பிலான சிறப்பு அமர்வு நடைபெற்றது. இந்த அமர்வில், இலங்கை எரிசக்தி துறை அமைச்சர் குமார ஜெயக்கொடி, சி.ஐ.ஐ. முன்னாள் தலைவர் சஞ்சீவ் பூரி உள்ளிட்ட பன்னாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இதில் தமிழ்நாடு அரசு சார்பில் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அவர், “புதுப்பிக்கத்தக்க மின் ஆற்றலில் 25,500 மெகாவாட் உற்பத்தித் திறனுடன் இந்தியாவிலேயே தமிழ்நாடு தற்போது மூன்றாம் இடத்தில் உள்ளது. காற்றாலை(Wind) மின்சார உற்பத்தியில் 11,500 மெகாவாட் திறனுடன் நாட்டில் இரண்டாம் இடத்திலும், சூரிய(Solar) மின் உற்பத்தியில் 10, 700 மெகாவாட் திறனுடன் நான்காவது இடத்திலும் தமிழ்நாடு உள்ளது. நீர்மின் ஆற்றலில் 2,323 மெகாவாட் திறனை கொண்டுள்ளோம்.
சோலார் மின்உற்பத்தி பூங்காக்கள், வீட்டுக் கூரை(Rooftop) சோலார் மின் உற்பத்தி போன்ற திட்டங்கள் தமிழ்நாட்டில் வேகமாக விரிவடைந்து வருகிறது. அதிகமான சோலார் மின் உற்பத்தி சாத்தியக்கூறு மற்றும் நீண்ட கடற்கரை அமைப்பு ஆகியவற்றால் காற்றாலை மற்றும் சோலார் ஒருங்கிணைந்த மின் உற்பத்தி மற்றும் சேமிப்பு திறன் மூலம் முழுநேர புதுப்பிக்கத்தக்க மின் ஆற்றல் என்ற நிலையை உருவாக்கிக் கொண்டு வருகிறோம்.
அடுத்த 5 ஆண்டுகளில், 10,000 மெகாவாட் சோலார் திறனும், 2,000 மெகாவாட் காற்றாலை திறனும் அதிகரிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. கடலில் காற்றாலை(Offshore wind energy) அமைப்பதில் தமிழ்நாடு முக்கியமான இடமாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் 35,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும்.
இதனுடன் ஏற்கனவே நிலத்தில் அமைந்துள்ள காற்றாலை மின் உற்பத்தி மற்றும் சோலார் மின் உற்பத்தி திறனையும் இணைத்தால், 24 மணி நேர புதுப்பிக்கத்தக்க மின் ஆற்றல் பயன்பாடு என்பது நம்மால் இயலும்.
ஏப்ரல் 2025ஆம் ஆண்டு, இந்தியாவுக்கும் இலங்கைக்கு இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்படி, மன்னார்க்கும் மதுரைக்கும் இடையே 400 கிலோவாட் உயர் மின்னழுத்த நேர்மின்னோட்ட பாதை, கடலுக்குடியில் கேபிள் மூலம் அமைகிறது. இந்த மின்பாதை அமைப்பு மற்றும் பசுமை ராமேஸ்வரம் திட்டம் ஆகியவை புதுப்பிக்கத்தக்க மின் ஆற்றலில் தமிழ்நாடு முன்னணியில் இருக்க உறுதுணையாகிறது.
இலங்கை மற்றும் பிற பகுதிகளுக்கு 24 மணி நேரமும் பசுமை ஆற்றலை கடத்துவதன் மூலம், தமிழ்நாடு புதுப்பிக்கத்தக்க மின் ஆற்றலின் நுழைவாயிலாக – தெற்காசியாவின் புதுப்பிக்கத்தக்க மின் ஆற்றல் வழித்தடத்தை உருவாக்க முடியும்.
மின்சார சேமிப்பு மற்றும் மின் விநியோக கட்டமைப்பு ஆகியவற்றை நவீனப்படுத்தி வருகிறோம். இதன் புதுப்பிக்கத்தக்க மின் ஆற்றலின் அதிகபட்ச பயன்பாட்டிற்கு வழிவகுக்கும். சோலார் மின் உற்பத்தி மிகையாக இருக்கும்போது அதனை சேமித்து, தேவை அதிகமிருக்கும் நேரங்களில் அதனை பயன்படுத்தும் கட்டமைப்புகளை மேற்கொண்டு வருகிறோம்.
புதுப்பிக்கத்த மின் ஆற்றல் தொடர்பில், குறிப்பாக நவீன காற்றாலை டர்பைன் தொழில்நுட்பம், கடல் காற்றாலை போன்றவற்றில் தனியார் பங்களிப்பு, உலகளாவிய ஒத்துழைப்புகள், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகள் ஆகியவற்றுக்கான கொள்கைகளை தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கி தந்துள்ளார்கள்.
இந்தியாவின் முதல் கடல் காற்றாலை கட்டமைப்பு தமிழ்நாடு கடற்கரைப் பகுதியில் உருவாகும் இவ்வேளையில் முதலீட்டாளர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், விநியோகக் கட்டமைப்பு ஆகியவற்றில் இணைந்துப் பணியாற்ற விருப்பமுள்ளவர்களை தமிழ்நாடு அரசு வரவேற்கிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, தமிழ்நாட்டை முழுமையான புதுப்பிக்கத்தக்க மின் ஆற்றல் பயன்பாட்டு பாதையில் விரைந்து கொண்டு செல்கிறது.
நாம் அனைவரும் இணைந்து, மாசு இல்லாத, கார்பன் இல்லாத மின் ஆற்றல் உற்பத்தி மற்றும் கட்டமைப்பை பலப்படுத்துவதன் மூலம் நாட்டை பசுமைப் பாதையில் செலுத்துவோம்.
இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க மின் ஆற்றலை நோக்கியப் பயணத்தில் தமிழ்நாடு பங்களிப்பு செலுத்துவதோடு, தெற்காசியப் பகுதியின் பசுமை ஆற்றல் ஒருங்கிணைவு மையமாக திகழும் நோக்கில் செயல்பட்டு வருகிறது” என சிவசங்கர் பேசினார்.