டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகனின் இல்லத்தில் இன்று (ஜனவரி 14) பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.
வழக்கமாக, தமிழர் திருநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள மத்திய இணை அமைச்சர் எல் முருகன் வீட்டில் பொங்கல் வைத்து கொண்டாடப்படும்.
அதன்படி இன்று பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.’ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற தேசிய ஒருமைப்பாட்டு நோக்கத்தின் கீழ் நடைபெற்ற இந்த விழாவில், தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கு வேட்டி சட்டையில் வந்த பிரதமர் மோடி, பொங்கல் வைக்கும் நிகழ்வை கண்டு களித்தார்.
சிலம்பாட்டம், கரகாட்டம், தப்பாட்டம் போன்ற தமிழகத்தின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.
இந்த விழாவில் தமிழகத்திலிருந்து முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் சமீபத்தில் வெளியான இந்தி திணிப்புக்கு எதிரான படமான பராசக்தி கதாநாயகன் சிவகார்த்திகேயன், அவரது மனைவி ஆர்த்தி வில்லன் ரவி மோகன் மற்றும் கெனிஷா இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டிருப்பது கவனத்தை பெற்றுள்ளது.
விழாவில் சிறப்புரையாற்றிய பிரதமர் “வணக்கம், பொங்கல் நல்வாழ்த்துகள்” என தமிழில் கூறினார்.

மேலும் அவர், “பொங்கல் உலகளாவிய அளவில் சர்வதேச பொங்கலாக மாறிவிட்டது. தமிழக மக்களுடன் இணைந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், வேளாண்மையைப் போற்றும் உன்னத பண்டிகையாக பொங்கல் விளங்குகிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கங்கைகொண்ட சோழபுரத்தில் பொங்கல் கொண்டாடப்பட்டது என்பதையும், திருக்குறள் தமிழர்களுக்கும் விவசாயிகளுக்கும் இருந்த ஆழமான தொடர்பை எடுத்துரைக்கிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு தொடர்ந்து பாடுபடும் என்றும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதே தங்கள் முதன்மை நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.
