“ஒரு தலைமுறையில் ஒருத்தர் படித்தால் அதற்கு அடுத்து வரும் தலைமுறை நன்றாக இருக்கும் என என் குடும்பத்தில் இருந்தே நான் பார்த்திருக்கிறேன்” என நடிகர் சிவகார்த்திகேயன் பேசினார்.
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற கருபொருளில் 2025-26 கல்வி ஆண்டிற்கான புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட 7 திட்டங்களின் தொடக்க விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (செப்டம்பர் 25) மாலை 4 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் பங்கேற்று நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில், ”கல்விக்காக அரசு எவ்வளவு திட்டங்கள் கொண்டுவருகிறதோ, அதை விட இங்குள்ள மாணவர்களிடம் எப்படியாவது படித்து முன்னேறி வந்துவிட வேண்டும் என்ற துடிப்பு இருப்பதை முக்கியமாக பார்க்கிறேன்.
எங்க அப்பா ஒருவேளை சாப்பிட்டு பள்ளிக்கு போனதால், நான் மூன்று வேளையும் சாப்பிட்டு பள்ளிக்கு போனேன். எங்க அப்பா ஸ்கூலுக்கு நடந்து போனாதால், நான் ஆட்டோவில், ரிக்ஷாவில் ஸ்கூலுக்கு போனேன்.
ஒரு தலைமுறையில் ஒருத்தர் படித்தால் அதற்கு அடுத்து வரும் தலைமுறை நன்றாக இருக்கும் என என் குடும்பத்தில் இருந்தே நான் பார்த்திருக்கிறேன்.
எங்க அப்பா அவர் வீட்டில் இருந்த வசதியை வைத்து நினைத்த படிப்பை படிக்க முடியவில்லை. ஒரு டிகிரிதான் படித்தார். ஆனால் என் அப்பா என்னை இரண்டு டிகிரி படிக்கவைத்தார். என் அக்கா 3 டிகிரி முடித்திருக்கிறார்.
நான் படித்த துறைக்கும் இப்போது செய்து கொண்டிருக்கும் வேலைக்கும் சம்பந்தம் இல்லை. சினிமா துறை ரொம்ப ரொம்ப சவாலானது. எந்த பின்னணியும் இல்லாமல் ஒரு துறைக்குள் நுழைவதே அசாத்தியமான விஷயம்.
அப்படி துறைக்குள் நுழைந்து.. சவால் வரும்போதெல்லாம் ’என்கிட்ட இரண்டு டிகிரி இருக்கு.. இங்கிருந்து அனுப்பினால்கூட ஏதாவது வேலை செஞ்சு பிழைச்சுக்குவேன்’ என நினைத்துக்கொள்வேன்.
இங்குள்ள மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவுகள் உள்ளது. உங்களது பயணம் பலருக்கும் முன்மாதிரியாகவும், ஊக்கமாகவும் உள்ளது. தமிழக அரசின் கல்விக்கான திட்டங்களை நீங்கள் அனைவரும் நன்றாக பயன்படுத்தி இன்னும் முன்னேற வாழ்த்துகள்.
கடைசியாக ஒன்று சொல்ல விரும்புகிறேன். நீங்கள் வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு, கார் வீடு வாங்குவதற்கு, எல்லார் முன்னாடியும் சமமாக இருப்பதற்கு ஒரே தீர்வு தான் நன்றாக படியுங்கள்” என சிவகார்த்திகேயன் பேசினார்.