சிவகார்த்திகேயன் – முருகதாஸ் ‘காம்பினேஷன்’ திருப்தியளிக்கிறதா?
முதல் படமான ‘தீனா’வில் தொடங்கி ‘ரமணா’, ‘கஜினி’, ‘துப்பாக்கி’, ‘ஏழாம் அறிவு’ என்று வித்தியாசமான ‘ஆக்ஷன்’ படங்களைத் தந்தவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இடையே ‘கத்தி’, ‘சர்கார்’ என்று ‘ப்ளாக்பஸ்டர்’கள் தந்தாலும் ‘ஸ்பைடர்’, ‘தர்பார்’ படங்களில் சரிவைச் சந்தித்தார். சமீபத்தில் இந்தியில் சல்மான்கானை நாயகனாகக் கொண்டு இவர் தந்த ‘சிக்கந்தர்’ பெருந்தோல்விக்கு உள்ளானது.
இந்த நிலையில் தற்போது தியேட்டர்களில் ‘மதராஸி’ வெளியாகியிருக்கிறது. இதில் நாயகனாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். இவர்களது காம்பினேஷன் எதிர்பார்ப்பை உருவாக்கினாலும், அது மிகப்பெரியதாக மாறவில்லை. அது ஏன்?
தியேட்டரில் ‘மதராஸி’ தரும் திரையனுபவம் அந்த கேள்வியைத் தவிடுபொடியாக்கியிருக்கிறதா?
’ஆபத்பாந்தவன்’ பார்முலா!
மிகப்பிரமாண்டமாகத் தயாரிக்கப்படுகிற ‘ஆக்ஷன்’ படங்களின் கதை என்னவாக இருக்கும்?
மக்களை ஆபத்திற்கு உள்ளாக்குகிற வகையில் சில பிரச்சனைகளை வில்லன்கள் இழுத்துக் கொண்டுவருவார்கள். அதனைச் சமாளிக்க முடியாமல் எல்லோரும் திணறும் நேரத்தில், அந்த களத்திற்குள் ஹீரோ வருவார். வில்லனை நேருக்கு நேராக எதிர்கொண்டு வெல்வார். அவரே எல்லோரையும் காக்கிற ‘ஆபத்பாந்தவன்’ என்பதைப் பாதிப்படத்திலேயே உணர்த்திவிடுவதே இப்படிப்பட்ட படங்களின் சிறப்பு. நட்சத்திர நடிகர்களின் ரசிகர்களும் அதனையே விரும்புவார்கள் என்பதே திரையுலகின் நம்பிக்கை.

கிட்டத்தட்ட அதனைப் பிரதிபலித்திருக்கிறது ‘மதராஸி’ கதை.
பெருமளவில் துப்பாக்கிகளைச் சுமந்துகொண்டு சில ட்ரக்குகள் தமிழ்நாட்டு எல்லைக்குள் புகுகின்றன. அதனை முன்னரே அறிந்து தடுக்க முயற்சிக்கின்றனர் என்.ஐ.ஏ. அதிகாரிகள். அவர்களாலும் எதுவும் செய்ய இயலவில்லை.
அந்த நிகழ்வில் காயம்பட்ட என்.ஐ.ஏ குழு அதிகாரியின் முன்னே சம்பந்தமில்லாமல் ஆஜராகிறார் ஒரு இளைஞன். காதலி தன்னைவிட்டுச் சென்றுவிட்டார் எனத் தற்கொலை செய்யத் துடிப்பவர் அந்த நபர். அவரது இருப்பு அந்த அதிகாரியை எரிச்சலுக்கு உள்ளாக்குகிறது.
இந்த நிலையில், அந்த கும்பல் எங்கிருக்கிறது என்ற விவரம் தெரிய வருகிறது. அந்த இடத்தைச் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்துவது அபாயகரமானது என்பதை அறிந்தவுடன், ‘தற்கொலைப்படை நடவடிக்கை’ போன்ற ஒன்றைச் செய்யலாம் என்று திட்டமிடுகிறார் அந்த அதிகாரி.
அதற்காக, அதிகாரப்பூர்வமற்ற முறையில் அந்த இளைஞனை இந்த பிரச்சனைக்குள் தள்ளுகிறார்.
அந்த இளைஞரும் அந்த துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்ட ஒரு ஆலைக்குள் நுழைகிறார். இந்த நேரத்தில், அந்த இளைஞரைத் தேடி அவரது காதலியும் என்.ஐ.ஏ. அலுவலம் வருகிறார்.
ஆலைக்குள் சென்ற இளைஞர் அந்த இடத்தைத் தகர்க்க முற்படுகையில், அந்த கும்பலின் தலைவர் அவர் கையில் சிக்குகிறார்.
அதனை அவர் அந்த அதிகாரியிடம் தெரிவிக்கிறார். அதேநேரத்தில், அந்த கும்பலைச் சேர்ந்த இன்னொருவரிடமும் அத்தகவலைத் தெரிவிக்கிற கட்டாயம் உருவாகிறது.
அப்போது, ‘அந்த கும்பலின் தலைவனைச் சுட்டுவிடு’ என்கிறார் அந்த அதிகாரி. ‘அப்படிச் சுட்டால் உன்னைச் சார்ந்தவர்களை துவம்சம் செய்துவிடுவேன்’ என்கிறார் எதிர்முனையில் இருக்கிற அந்த கும்பலைச் சேர்ந்தவர்.
அவர்கள் சொன்னதைக் கேட்டபிறகு, அந்த இளைஞர் என்ன செய்தார்? அந்த இளைஞனின் காதலி ஏன் அவரை விட்டுச் சென்றார்? முடிவில், ‘துப்பாக்கி’ பிரச்சனை என்னவானது என்று சொல்கிறது ’மதராஸி’யின் மீதி.
ஆக்ஷன் படங்களுக்கான சிக்கல்!
குறிப்பிட்ட காலகட்டத்தில் சில ‘ஆக்ஷன்’ படங்கள் பெரிய வெற்றியைப் பெறும். ஆனால், ’அதே பார்முலா’வில் உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிற சில படங்கள் சில காலம் கழித்து வெளியாகித் தோல்வியைத் தழுவும். எம்ஜிஆர், சிவாஜி காலம் தொட்டு இப்போதுவரை தொடர்கிறது அந்த சிக்கல்.
ஏ.ஆர்.முருகதாஸும் அப்படியொரு சிக்கலைச் சமீப ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகிறார்.
‘கஜினி’ சூர்யா போல, ‘மதராஸி’ படத்தில் சிவகார்த்திகேயன் பாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார். அதனை ரசிகர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா, இல்லையா என்பதே இப்படத்தின் ப்ளஸ் அல்லது மைனஸாக இருக்கும்.
’மதராஸி’ திரைக்கதையில் இரண்டு, மூன்று முக்கியத் திருப்பங்கள் இருக்கின்றன.
வில்லன்களின் உலகத்திற்குள் நாயக பாத்திரம் காலடி எடுத்து வைப்பது அதிலொன்று. அதற்கான விதையாக, ‘பிளாஷ்பேக்’கள் இதில் இருக்கின்றன. நாயகியின் இருப்பும் அதையொட்டி கதையில் நியாயப்படுத்தப்படுகிறது.
இடைவேளையை ஒட்டி, அந்த வில்லன்களோடு நாயகனுக்கு நேரடியாக மோதல் ஏற்படுவது இன்னொரு திருப்பம்.
இவையிரண்டும் ‘முருகதாஸின் வெற்றிகரமான ஆக்ஷன் பட’ அனுபவத்தைத் தருகின்றன.
இப்படத்தின் பின்பாதியிலும் சில திருப்பங்கள் இருக்கின்றன. அவை ‘க்ளிஷே’க்களாக தெரிகின்றன.
மற்றபடி, ஒரு வழக்கமான ஆக்ஷன் படத்திற்கான உள்ளடக்கத்தை கொண்டிருக்கிறது ‘மதராஸி’.
அதற்கு சுதீப் இளமோனின் ஒளிப்பதிவு, ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு, அருண் வெஞ்சாரமூடுவின் தயாரிப்பு வடிவமைப்பு, அனிருத்தின் பின்னணி இசை ஆகியன துணை நிற்கின்றன.
அனிருத் இசையில் ‘சலம்பல’, ‘தங்கப்பூவே’ பாடல்கள் ஓகே ரகம். ஆனால், ‘தூள் கிளப்பும்’ ரகத்தில் இந்த படத்தில் ஒரு பாடல் கூட இல்லை என்பது குறையே.
விஎஃப்எக்ஸ், டிஐ உள்ளிட்ட பல நுட்பங்கள் இதில் சிறப்புற அமைந்திருக்கின்றன.
கமர்ஷியல் படங்களில் நாயக பாத்திரம் என்றால் ‘கெத்தாக’ இருக்க வேண்டுமென்று நம்புவதில், அதனை மிகத்தீவிரமாகக் கடைபிடிப்பதில் சில நடிகர்கள் உறுதியாக இருந்து வருகின்றனர்.
மிகச்சில நாயகர்கள் அந்த எல்லைக்கோட்டில் இருந்து அவ்வப்போது விலகி நிற்பார்கள். அப்படியொரு பாத்திர வார்ப்பினை இதில் முயற்சித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
என்ன, குழந்தைகளும் ரசிக்கிற அவரது படத்தில் ‘நான் தற்கொலை பண்ணிக்கப் போறேன்’ என்று அடிக்கடி வசனம் பேசுவதைத்தான் ஏற்க முடியவில்லை. அந்த இடங்களைக் கொஞ்சம் சரிப்படுத்தியிருக்கலாம்.

நாயகி ருக்மிணி வசந்த் அழகாகத் திரையில் காட்டப்பட்டிருக்கிறார். ஆனாலும், ‘ரொம்ப மெச்சூர்டு’ என்ற எண்ணம் அடிக்கடி தலைதூக்குகிறது.
ஒரு காட்சியில் ‘இப்பதான் நல்ல வொய்ப் மெட்டீரியலா ஆயிருக்கே’ என்று சிவகார்த்திகேயன் வசனம் பேசுவார். அது போன்ற இடங்களைத் தவிர்த்துப் பார்த்தால், இந்த படத்திற்கு இவர் தேவையில்லைதான்.
வில்லனாக இதில் வித்யுத் ஜாம்வால், சபீர் கல்லாரக்கல் தோன்றியிருக்கின்றனர். இருவருக்குமே தனித்தனியாகச் சண்டைக்காட்சிகள் இருக்கின்றன. இருவருமே அதில் கலக்கியிருக்கின்றனர். ஆனாலும், பல படிகள் முன்னே நிற்கிறார் வித்யுத். நாயகனாகத் தொடங்கிவிட்டார் என்பதற்காகவே, அவருக்காகப் பிரத்யேகமாகச் சில ‘பில்டப்’களை இதில் சேர்த்திருக்கிறார் இயக்குனர்.
இந்த படத்தில் பிஜு மேனன், விக்ராந்த் முக்கியப் பாத்திரங்களை ஏற்றிருக்கின்றனர். அவர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டபோதும், அது திரைக்கதையில் அடிக்கோடிடும் வகையில் அமையவில்லை.
இவர்களோடு தலைவாசல் விஜய், ஆடுகளம் நரேன், லிவிங்ஸ்டன் உட்படச் சிலர் ஓரிரு காட்சிகளில் தலைகாட்டியிருக்கின்றனர். வினோதினி வைத்தியநாதன், சந்தானபாரதி போன்றவர்களும் அதில் அடக்கம்.
இன்னும் சித்தார்த் சங்கர், ரிஷி ரித்விக் உட்படச் சிலர் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு நடுவே விமலா ராமன் போன்ற சிலரும் ‘ஒப்புக்கு சப்பாணியாக’ச் சில ஷாட்களில் தலைகாட்டியிருக்கின்றனர்.
மேற்சொன்னவற்றில் இருந்து இப்படத்தில் நாயகி தவிர்த்து பெண் பாத்திரங்களுக்கான முக்கியத்துவம் குறைவு என்பது புரிந்துவிடும்.
தற்போது இப்படம் பற்றிய பார்வையாளர்களின் கருத்துகள் கலவையாக உள்ளன.
இப்படம் இதற்கு முன் வந்த ஏ.ஆர்.முருகதாஸின் படங்களை நினைவூட்டுகிற வகையில் உள்ளது. அதேநேரத்தில், சமீபத்திய ட்ரெண்டுக்கு ஏற்றவாறு ‘மதராஸி’ உள்ளதா என்ற கேள்வி அவ்விஷயத்தைப் பின்னுக்குத் தள்ளுகிறது. மேற்சொன்ன இரண்டும் ஒன்றிணைகிறபோது சில முரண்கள் எழும். அவை இப்படத்திற்கான பலவீனங்கள்.
லாஜிக் மீறல்கள் என்று பார்த்தால் ‘மதராஸி’யில் கணிசமாகச் சிலவற்றை நம்மால் கண்டறிய முடியும்.
அதேநேரத்தில் சமீபகாலமாகத் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியான ‘பெரிய நாயகர்களின்’ ஆக்ஷன் படங்களை ஒப்பிடுகையில் இப்படத்தின் கதை சொல்லலும் காட்சியாக்கமும் நம்மை பெரிதாக அயர்ச்சியுற வைக்காது. இது தமிழைவிடத் தெலுங்கில் பெரிய வரவேற்பைப் பெறவும் வாய்ப்புள்ளது.

ஒருவேளை மேற்சொன்னது நிகழாவிட்டால், இப்படத்தை ஓடிடியிலோ, தொலைக்காட்சிகளிலோ காணும்போது ‘இந்த படம் நல்லாத்தானே இருக்கு’ என்று அதே ரசிகர்கள் சொல்லலாம். அதற்கான வாய்ப்புகளையும் கொண்டிருக்கிறது ‘மதராஸி’.
மற்றபடி, ஏ.ஆர்.முருகதாஸ் உடன் சிவகார்த்திகேயன் கூட்டணி சேர்ந்துவிட்டால் அற்புதமான ’கமர்ஷியல் பட அனுபவம்’ கிடைக்கும் என்று அவர்களது ரசிகர்கள் நம்பினாற் போன்றதொரு விஷயத்தை ‘மதராஸி’ நிகழ்த்தவில்லை..!