சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த கோவில் காவலாளி அஜித்குமார் என்ற இளைஞர் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த சம்பவத்தில் 5 போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். AjithKumar Lockup Death
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞர், நகை திருடியதாக குற்றம்சாட்டப்பட்டு சந்தேகத்தின் பேரில் போலீசாரால் கடுமையாக விசாரிக்கப்பட்டார். இந்த விசாரணையின் போது அஜித்குமார் மரணமடைந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து அஜித் குமார் மரணத்துக்கு காரணமானவர்களாக கூறப்படும் 6 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் 6 போலீசாரையும் கைது செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம், சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் அஜித்குமாரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்று இரவு கிடைத்த நிலையில் 5 போலீசாரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 5 போலீசார் மீதும் தற்போது கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.