லாக்கப் மரணம் எதிரொலி… சிவகங்கை எஸ்.பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

Published On:

| By christopher

Sivaganga SP placed into waiting list

விசாரணைக்கு சென்ற கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்தில் 5 போலீசார் கைது செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக இன்று (ஜூலை 1) சிவகங்கை எஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். Sivaganga SP placed into waiting list

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணியாற்றி வந்த 28 வயதான அஜித்குமார், ஒரு திருட்டு வழக்கு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் கடந்த ஜூன் 28ஆம் தேதி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், விசாரணையில் சம்பந்தப்பட்ட ஆறு போலீசார் அன்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

எனினும் இதுதொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையில் வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் நேற்று இரவு 5 போலீசார் கைது செய்யப்பட்டனர். அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க திருப்புவனம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக சிவகங்கை எஸ்பி ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உள்துறை செயலர் தீர்ஜ் குமார் இன்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ராமநாதபுரம் எஸ்.பி. சந்தீஷ்-க்கு சிவகங்கை எஸ்பியாகவும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share