கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு விசாரணை குழுவினர் இன்று விசாரணையை தொடக்க உள்ளனர்.
கரூரில் கடந்த செப்டம்பர் 27ம்தேதி நடிகர் விஜய் கலந்து கொண்ட தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த துயர சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்துள்ளது. ஆணையம் அடுத்த நாளே தனது விசாரணையை தொடங்கியது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக வெற்றிக் கழக கட்சியினருக்கு காட்டமான கேள்விகளை எழுப்பிய நீதிபதி, கரூர் சம்பவத்தில் பாரபட்சமற்ற மற்றும் முழுமையான விசாரணையை நடத்துவதற்காக வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை (SIT) நியமித்தார்.
இந்நிலையில் ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விமலா, சிபிசிஐடி எஸ்பி சியாமளா தேவி ஆகிய 2 பெண் எஸ்பிக்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும், இக்குழுவில் டி.எஸ்.பி, ஏ.டி.எஸ்.பி, ஆய்வாளர்கள் என 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். குழுவில் இடம்பெற்றுள்ள 2 பெண் எஸ்பிக்களும் நேற்று ஐஜி அஸ்ரா கார்க்குடன் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க நேற்று காலை சென்னை வந்த ஏடிஎஸ்பி பிரேமானந்த், ஐஜி அஸ்ரா கார்க்கிடம் கரூர் வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒப்படைத்தார்.
இதைத்தொடர்ந்து இன்று அஸ்ரா கார்க் குழுவினர் கரூர் வர உள்ளனர். மேலும் இன்று அல்லது நாளை விசாரணையை தொடங்கும் வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.