தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாதம் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் பீகாரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்தநிலையில் நாடு முழுவதும் 12 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் டெல்லியில் இன்று (அக்டோபர் 27) பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் (Special Intensive Revision – SIR) இரண்டாம் கட்டம் தொடங்கப்படும். அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி உட்பட மொத்தம் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்ட ‘SIR’ பணி மேற்கொள்ளப்படும்.
வரவிருக்கும் தேர்தல்களுக்கு முன்னர் வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக, அதில் உள்ள இரட்டைப் பதிவுகளை நீக்குதல், பிழைகளைச் சரிசெய்தல் மற்றும் தகுதியற்றவர்களை நீக்குதல் ஆகியவற்றை இந்தத் திருத்தப் பணி நோக்கமாகக் கொண்டுள்ளது.
அரசியல் கட்சிகள் வாக்காளர் பட்டியலின் தரம் குறித்து தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருவதால், ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னரும் இந்த சிறப்புத் தீவிர திருத்தப் பணி (SIR) மேற்கொள்வது அவசியம்.
SIR பணியானது 1951ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை ஏற்கனவே 8 முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடைசியாக 21 ஆண்டுகளுக்கு முன்னர் 2002-2004 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது” என்றார்.
அடிக்கடி நிகழும் இடப்பெயர்வு (Migration) காரணமாக வாக்காளர் பட்டியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் விளைவாக, வாக்காளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்படுவது, நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் அகற்றப்படாமல் இருப்பது மற்றும் வெளிநாட்டவர்கள் தவறாகப் பட்டியலில் சேர்க்கப்படுவது போன்ற பிழைகள் ஏற்படுகின்றன எனவும் கூறினார்.
