வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை, பலகாரம் போன்று புது திரைப்படங்களும் பொதுமக்களின் மனதில் இடம்பிடித்து விடும். இதுவரை தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்கள் தீபாவளி ரிலீஸாக வெளியாகும்போது, ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நட்சத்திரங்களின் படங்களை கண்டு மகிழ்வது வழக்கம்.
ஆனால் இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக பிரதீப் ரங்கநாதனின் டியூட், துருவ் விக்ரமின் பைசன் மற்றும் ஹரிஷ் கல்யாணின் டீசல் என இளம் கதாநாயகர்களின் படங்கள் திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ளன.
மூன்று படங்களுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், முன்னனி நடிகர்களும் தங்களது வாழ்த்துகளை இளம் நடிகர்களின் படக்குழுவினருக்கு தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சிலம்பரசன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “அன்பான ரசிகர்களே, இந்த தீபாவளி நம் இளைஞர்களுக்குச் சொந்தமானது. #டீசல் #டியூட் மற்றும் #பைசன் ஆகியவை அன்பு, நம்பிக்கை மற்றும் கடின உழைப்பால் உருவாக்கப்படுகின்றன.
ஒப்பிடுப்பதை நிறுத்திவிட்டு, நம் தமிழ் சினிமாவின் ஒரு பகுதியாக அவர்களைக் கொண்டாடத் தொடங்குவோம். உள்ளே நுழைந்தவர்கள், உள்ளே நுழைபவர்கள் மற்றும் உள்ளே வரக் காத்திருப்பவர்களை ஆதரிக்கவும். ஒன்றாக, இந்த சினிமாவை நாம் உயிர்ப்புடன் வைத்திருப்போம். ❤️ அனைத்து படங்களையும் திரையரங்குகளில் பாருங்கள். முன்கூட்டியே தீபாவளி வாழ்த்துக்கள் 🪔” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் கார்த்தி தனது எக்ஸ் பக்கத்தில், “தீபாவளி கொண்டாட்டங்கள் இன்று புதிய வெளியீடுகளுடன் தொடங்குகின்றன…. படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! #Diesel #Dude #Bison படத்தில் நடித்துள்ள உங்கள் அனைவருக்கும் மிகப் பெரிய வெற்றி மற்றும் கொண்டாட்டங்கள் அமைய வாழ்த்துக்கள்! முன்கூட்டியே தீபாவளி வாழ்த்துக்கள் நண்பர்களே!” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் அருண் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று வெளியாகும் #DUDE #DIESEL மற்றும் #BISON படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற வாழ்த்துக்கள்!! படக்குழுவினருக்கு நல்வாழ்த்துக்கள்👍🏻 அனைவருக்கும் முன்கூட்டியே தீபாவளி வாழ்த்துக்கள்..❤️” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இன்றைய இளைஞர்களின் ஆற்றலால் இயக்கப்படும் #Dude , #Diesel மற்றும் #Bison ஆகிய துடிப்பான படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள், இந்த தீபாவளிக்கு அனைவருக்கும் மகத்தான வெற்றியை வாழ்த்துகிறேன் 🪔” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் ஸ்ரீமன் தனது வாழ்த்து செய்தியில், “இந்த தீபாவளிக்கு, #டீசல் #நண்பா #பைசன் ஆகிய படங்களின் மூலம் அடுத்த தலைமுறை திரைப்பட நடிகர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்கள் முத்திரையைப் பதிப்பதைப் பார்ப்பது புத்துணர்ச்சியூட்டுகிறது! இந்த நடிகர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் மகத்தான வெற்றியை பெற வாழ்த்துகிறேன், தீபாவளி பண்டிகைக் களத்தில் நுழையத் துணிந்த அவர்களுக்குப் பாராட்டுகள் எல்லைகளைத் தாண்டிச் செல்லுங்கள். வாழ்த்துக்கள். கடவுள் ஆசிர்வதிப்பாராக” எனக் குறிப்பிட்டுள்ளார்.