இந்தியாவின் முதல் ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படமான ’தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’, மற்றும் ’தி லஞ்ச்பாக்ஸ்’, ’மசான்’, ’பாக்லைட்’ உள்ளிட்ட பாராட்டப்பட்ட பல திரைப்படங்களைத் தயாரித்துள்ள நிறுவனம் சீக்யா என்டர்டெயின்மென்ட் .
இந்த நிறுவனம் இப்போது இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுவை வைத்து தமிழில் ஒரு படம் தயாரிக்கிறது. ‘பீட்சா’, ’ஜிகர்தண்டா’, ’பேட்ட’, ’இறைவி’, ’மெர்குரி’, ’ஜகமே தந்திரம்’, ’மகான்’, ’ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்’ ’ரெட்ரோ’ வுக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜின் பத்தாவது படம் இது.
சீக்யா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர் குனீத் மோங்கா கபூர் , “பல்வேறு கலாச்சாரங்களை கடந்து பார்வையாளர்களை சென்றடையும் மண் சார்ந்த கதைகளை சொல்வதில்தான் நாங்கள் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளோம். அந்த நம்பிக்கையை நிச்சயம் கார்த்திக் சுப்புராஜ் காப்பாற்றுவார். கார்த்திக்குடன் இந்தப் பயணத்தில் இணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்கிறார்.
கார்த்திக் சுப்பராஜ், “சீக்யா தயாரித்திருக்கும் படங்கள் அனைத்தையும் நான் ரசித்திருக்கிறேன்.. விருதுகளுக்கு அர்த்தமுள்ள, தகுதியான படங்களைத் தயாரித்த குனீத் மற்றும் அச்சினுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. நான் எழுதியிருக்கும் இந்தக் கதை என் மனதுக்கு நெருக்கமானது. அந்தக் கதைக்கான சரியான தயாரிப்பாளர்கள் கிடைத்துள்ளனர்” என்றார்.
சந்தோசம் . ஆனால் ஒரு ஸ்மால் டவுட்.!
முதுமலைக் காட்டில் அனாதையாக வந்த ஒரு குட்டியானைக்கு ரகு என்று பெயர் வைத்து, அதன் தந்தையும் தாயுமாக இருந்து வளர்த்த பொம்மன், பெல்லி என்ற பழங்குடி தம்பதியின் பேரன்பை, அவர்களை வைத்தே படம் எடுத்து ஆஸ்கார் வாங்கிய நீங்கள், அவர்களுக்கு செய்வதாகச் சொன்ன உதவிகளை செய்யவே இல்லை என்று தகவல் வந்ததே…. !
சரி பண்ணிட்டீங்களா?
— ராஜ திருமகன்
