இந்திய அணியில் இருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்த நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர், தற்போது இந்தியா ஏ அணிக்கான கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சாம்பியன் டிராபி போட்டியில் இந்திய அணி பட்டம் வெல்வதற்கும், ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டனாக 600+ ரன்களை குவித்து அந்த அணி இறுதிப்போட்டி வருவதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர் ஸ்ரேயாஸ் ஐயர். அதுமட்டுமன்றி ரஞ்சி டிராபியில் 5 போட்டிகளில் விளையாடிய அவர், இரண்டு சதங்கள் மற்றும் தனது முதல் இரட்டைச் சதம் உட்பட 480 ரன்கள் குவித்தார்.
இப்படி பார்மின் உச்சக்கட்டத்தில் இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது.
குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்ந்து, விரைவில் தொடங்க இருக்கும் ஆசியக் கோப்பை போட்டியிலும் அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இதனால் இந்திய அணியின் தேர்வுக்குழு மீது முன்னாள் ஜாம்பவான்கள் மற்றும் ரசிகர்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்தனர்.
இந்தச் சூழலில் தான் இந்தியா ஏ அணிக்கான கேப்டன் பொறுப்பை ஸ்ரேயாஸ் ஐயருக்கு தற்போது வழங்கியுள்ளது பிசிசிஐ.

ஸ்ரேயாஸ் தலைமையிலான இந்தியா ஏ அணி, வருகிற 16 மற்றும் 23ம் தேதிகளில் லக்னோவில் நடைபெறும் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான மல்டி டே டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. அதைத் தொடர்ந்து கான்பூரில் நடைபெறும் 3 ஒரு நாள் போட்டிகளிலும் பங்கேற்க உள்ளது.
ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிரான முதல் தரப் போட்டிகளுக்கான இந்தியா ‘ஏ’ அணி:
ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், என். ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், துருவ் ஜூரல் (துணை கேப்டன் & விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஹர்ஷ் துபே, ஆயுஷ் பதோனி, நிதிஷ் குமார் ரெட்டி, தனுஷ் கோட்டியான், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார், கலீல் அகமது, மானவ் சுதர், யாஷ் தாக்கூர். ( கே.எல். ராகுல், முகமது சிராஜ் இரண்டாவது போட்டியில் இணைவார்கள்).