நாடு முழுவதும் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய பக்திப் பரவசத்துடனும் கோலாகலமான கொண்டாட்டங்களுடனும் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது.
சிவாலயங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து, சரண கோஷங்களை எழுப்பியும் பால், தேன், வில்வ இலைகள் போன்ற பொருட்களை சிவபெருமானுக்குப் படைத்தும் சிறப்பு பூஜைகளிலும், அபிஷேக ஆராதனைகளிலும் பங்கேற்று வழிபட்டனர்.
சென்னை கபாலீஸ்வரர் கோவில், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் உட்பட அனைத்து சிவாலயங்களும் பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன.
கோவை ஈஷாவில்..
கோவை ஈஷா யோகா மையத்தில் சத்குரு தலைமையில் ஆண்டுதோறும் நடைபெறும் மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் இந்த ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெற்றன. யோகேஸ்வர லிங்க மகா அபிஷேகம், இரவு முழுவதும் நீடித்த இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் என சூரிய உதயம் வரை பக்தர்கள் ஆன்மீக அனுபவத்தில் திளைத்தனர். இந்த சிறப்பு நிகழ்வில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், துறைசார் ஆளுமைகள், திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.
