“அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ள கருத்து விவாதப் பொருளாகி உள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கிறது. திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினை, காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழு அண்மையில் சந்தித்து பேசியது.
அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் விஜய்யின் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். விஜய்யை பிரவீன் சக்கரவர்த்தி நேரில் சந்தித்து பேசியதும் சர்ச்சையானது.
ஆனாலும் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளரும் ஐவர் குழுவின் தலைவருமான கிரிஷ் சோடங்கர், தவெகவுடன் கூட்டணி என்பது வதந்தி.. திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது; திமுகவுடன் சுமூகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது எனவும் விளக்கம் அளித்திருந்தார். ஆனாலும் திமுகவிடம் அதிக தொகுதிகள்; ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை காங்கிரஸ் வலியுறுத்தி வருவதாக கூறப்பட்டு வருகிறது.
இந்த பின்னணியில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், IPDS என்ற நிறுவனம் வெளியிட்ட கருத்து கணிப்பு விவரம் ஒன்றை தமது எக்ஸ் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
IDPS கருத்து கணிப்பில், தற்போதைய சூழ்நிலையில் திமுகவுக்கு 17.07%; அதிமுகவுக்கு 15.03%; தவெகவுக்கு 14.20%’; நாம் தமிழர் கட்சிக்கு 7.50% ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸுக்கு 3.10% ஆதரவு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை ஷேர் செய்த மாணிக்கம் தாகூர், “ தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை.ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது. இந்த தரவு காங்கிரஸ் மட்டுமல்ல, மற்ற கட்சிகளின் எண்ணிக்கைகளும் முழுமையாக பிரதிபலிக்கப்படவில்லை என நினைக்கிறேன். ஆனால்
கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது. அதே நேரம், இப்போது அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது தானே ! Time for share of power not only Share of seats” என கூறியுள்ளார்.
