துலீப் டிராபி போட்டிகளுக்கான 15 பேர் கொண்ட மேற்கு மண்டல அணிக்கு ஷர்துல் தாக்கூர் கேப்டனாக இன்று (ஆகஸ்ட் 1) நியமிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு மற்றும் மத்திய என 5 மண்டல அணிகள் மோதும் உள்நாட்டு முதல் தர கிரிக்கெட் போட்டி வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி இரண்டு காலிறுதிப் போட்டிகளுடன் தொடங்குகிறது.

ஏற்கெனவே அரையிறுதிக்கு நேரடியாக நுழைந்த மேற்கு மண்டலம், செப்டம்பர் 4 ஆம் தேதி தனது முதல் போட்டியை எதிர்கொள்ள உள்ளது. அனைத்து போட்டிகளும் பெங்களூருவில் உள்ள BCCI சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இறுதிப் போட்டி செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் பி.கே.சி.யில் உள்ள எம்.சி.ஏவின் ஷரத் பவார் இன்டோர் கிரிக்கெட் அகாடமியில் இன்று நடைபெற்ற தேர்வுக் கூட்டத்திற்குப் பிறகு மும்பை கிரிக்கெட் சங்கத்தின் சஞ்சய் பாட்டீல் தலைமையிலான குழு 15 வீரர்கள் கொண்ட மேற்கு மண்டல அணியை அறிவித்தது.
அதில் குஜராத்தைச் சேர்ந்த நான்கு பேர் மற்றும் மகாராஷ்டிரா மற்றும் சவுராஷ்டிராவைச் சேர்ந்த தலா இரண்டு பேர் என ஏழு மும்பை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் கேப்டன் அனுபவம் வாய்ந்த ஸ்ரேயாஸ் ஐயர், ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். எனினும் முன்னாள் இந்திய வீரர்களான அஜிங்க்யா ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை.
மேற்கு மண்டல அணி: ஷர்துல் தாக்கூர் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஆர்யா தேசாய், ஹார்விக் தேசாய், ஷ்ரேயாஸ் ஐயர், சர்பராஸ் கான், ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்மீத் படேல், மனன் ஹிங்ராஜியா, சவுரப் நவாலே, ஷம்ஸ் முலானி, தனுஷ் கோட்டியன், தர்மேந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, அர்சான் நக்வாஸ்வாலா