கனடா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் சாந்தனு முதன்முறையாக சிறந்த நடிகருக்கான விருது வென்றுள்ளார்.
நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியான திரைப்படம் ‘ப்ளூ ஸ்டார்’. கிரிக்கெட் கதைக்களத்தை மையமாகக் கொண்டு ஜாதி பாகுபாட்டை பேசிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்படம் வெளியானது போது நடிகர் சாந்தனு தனது எக்ஸ் பக்கத்தில், “சக்கரக்கட்டி முதல் ப்ளூ ஸ்டார் வரையிலான இந்த பயணம் எனக்கு நிறைய பாடங்களை கற்றுக்கொடுத்தது. வாழ்க்கை முழுவதும் நினைத்து பார்க்க கூடிய நல்ல நினைவுகளை கொடுத்தது. ‘உங்க வீட்டு பசங்க ஜெயிக்குற படம் தான் ‘ப்ளூ ஸ்டார்’. திரையரங்குக்கு சென்று திரைப்படத்தை பாருங்கள். நிச்சயம் இந்த படம் உங்களுக்கு பிடிக்கும். ஜெயிக்கிறோம்.” என நெகிழ்வுடன் பதிவிட்டிருந்தார்.
அவர் சொன்னபடியே ப்ளூ ஸ்டார் திரைப்படம் வெற்றியடைந்த நிலையில், ”இந்த வெற்றி என்ற வார்த்தையை குறிப்பிடுவதற்கு எனக்கு 15 ஆண்டுகள் 4 மாதங்கள் என 5,600 நாட்கள் ஆகியுள்ளன. இது உங்களால் தான். உங்களின் தொடர் ஆதரவு தான் என்னை இத்தனை ஆண்டுகளாக துவளவிடாமல் ஓடவைத்துள்ளது. இதற்காக நான் நன்றிகடன பட்டுள்ளேன்” என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கனடா சர்வதேச திரைப்பட விழாவில் ப்ளூ ஸ்டார் ’சிறந்த திரைப்படம்’ என்ற விருதை, வென்றது. அதே போன்று நடிகர் சாந்தனு சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது அவரது முதல் சர்வதேச விருதாகும்.

இதுதொடர்பாக சாந்தனு தனது எக்ஸ் பக்கத்தில், “கனடா சர்வதேச திரைப்பட விழாவில் ப்ளூ ஸ்டார்
படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை வென்றது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது ❤️இந்த படம் எனக்கு ஒரு கதாபாத்திரத்தை விட அதிக கொடுத்தது – இது எனக்கு வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருக்கும் நினைவுகள், பாடங்கள் மற்றும் அன்பைக் கொடுத்தது. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட நன்றி பா.ரஞ்சித் அண்ணா, என் இயக்குனர் ஜெய்குமார், என்னை நம்பிய என் சக நடிகர்களான அசோக் செல்வன், பிரித்வி, கீர்த்தி பாண்டியன், பகவதி பெருமாள் மற்றும் தயாரிப்பாளர், படக்குழுவின் ஒவ்வொரு நபருக்கும், மிக முக்கியமாக, எனது பயணத்தை ஆதரித்த எனது அன்பான பார்வையாளர்களுக்கும் நன்றி” என சாந்தனு தெரிவித்துள்ளார்.