ஒரு பணக்காரனிடம் இருந்து ஒரு கோடி திருடுவதை விட மோசமானது, இயக்குநராகி சாதிக்கத் துடிக்கும் ஒரு படைப்பாளியின் கதையைத் திருடி படம் எடுத்து கோடி கோடியாக சம்பாதித்து விட்டு , அந்த படைப்பாளிக்கு ஒரு பைசா கூடத் தராமல் அவரது வயிற்றில் அடிப்பது .
நெற்றிக்கண் திறப்பினும் குடம் குற்றமே . இதை யார் செய்தாலும் மன்னிக்க முடியாது .
விஜய் ஆண்டனி தயாரித்து ஹீரோவாக நடிக்க, அருவி பட இயக்குனர் திரு அருண் பிரபு இயக்கத்தில் 2025 செப்டம்பர் மாதம் ரிலீசாகி தற்போது ஹாட் ஸ்டார் OTT யில் வெளியாகி பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் படம் சக்தி திருமகன்.
‘அந்தப் படத்தின் கதை தன்னுடைய கதை என்று கண்ணீர் வடிக்கிறார் சுபாஷ் சுந்தர் என்பவர் .
“நான் அந்தக் கதையை பிரபல படத் தயாரிப்பு நிறுவனமான டீரிம் வாரியாசுக்கு கொடுத்திருந்தேன். தயாரிப்பாளர் SR பிரபு அவர்களுக்கு e-mailல் அனுப்பியும் வைத்துள்ளேன் அதற்கு என்னிடம் ஆதாரங்கள் இருக்கிறது .2022 ம் ஆண்டில் கதையை டெல்லியில் காப்பிரைட் முறைப்படி பதிவு செய்து இருக்கிறேன் .
ஆனால் என்னுடைய கதையை என் அனுமதி இல்லாமல் படமாக்கியிருக்கிறார்கள் எனக்கு நியாயம் வேண்டும்” என்கிறார் அவர் .
” ட்ரீம் வாரியஸ் நிறுவனத்தின் மேல் இந்தக் குற்றச்சாட்டு முன்பே அரசல் புரசலாக பலமுறை இருக்கிறது . அங்கு கதை கேட்கும் பிரிவில் இருந்த ஒரு நபர் இந்த வேலையைச் செய்திருக்க அதிக வாய்ப்பு உண்டு. மற்றபடி இது எஸ் ஆர் பிரபுவுக்கு தெரிந்து நடந்ததா என்பது அவருக்கே வெளிச்சம் ” என்கிறார்கள் சிலர்.
இந்தப் பக்கம் ” விஜய் ஆண்டனி இது போன்ற விஷயங்களை ஊக்குவிப்பவர் அல்ல. சுபாஷ் சுந்தரின் குற்றச்சாட்டு உண்மை என்றால் அதற்கு சக்தித் திருமகன் படத்தில் கதை என்று போட்டுக் கொள்ளும் இயக்குனர் அருண் பிரபு தான் பொறுப்பு ” என்கிறது இன்னொரு தரப்பு.
யார் வேண்டுமானலும் காரணமாக இருக்கட்டும் . ஆனால் இது கண்டிக்க வேண்டிய விஷயம் . ஒருவேளை சுபாஷ் சுந்தர் எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினர் இல்லை என்றாலும் அவருக்கு நியாயம் பெற்றுத்தர, திரை எழுத்தாளர் சங்கம் களமிறங்க வேண்டும் .
குற்றச் சாட்டு உண்மை எனில் படத்தின் பட்ஜெட்டில் பாதியை எழுத்தாளருக்கு வழங்க வேண்டும் என்று முடிவு எடுத்தால் கூடத் தப்பில்லை.
- ராஜ திருமகன்.
