’லாபியிஸ்ட்’னா என்னங்க..?!
சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, ஸ்ரீலீலா, அதர்வா நடிப்பில், சுதா கொங்கரா இயக்குகிற திரைப்படமான ‘பராசக்தி’ வரும் பொங்கலன்று வெளியாகவிருக்கிறது. அந்த படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டபோது, விஜய் ஆண்டனியும் தனது படத்திற்கு ‘பராசக்தி’ என்று வைப்பதாக அறிவித்தார். அந்த பெயரில் தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் தனது ‘சக்தித் திருமகன்’ வெளியாகும் என்றார்.
அதன்பிறகு, அந்த அறிவிப்பில் இருந்து பின்வாங்கிய விஜய் ஆண்டனி, ‘பத்ரகாளி’ என்ற பெயரில் ‘சக்தித் திருமகன்’ தெலுங்கு பதிப்பு வெளியாகும் என்று தெரிவித்தார். அப்போது, விஜய் ஆண்டனியின் படத்திற்கு ‘பராசக்தி’ என்ற டைட்டில் கட்டாயம் தேவையா என்ற கேள்வியைச் சிலர் எழுப்பினர்.
அருண்பிரபு இயக்கியுள்ள ‘சக்தித் திருமகன்’ தற்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.
மேற்சொன்ன கேள்விக்கு இப்படம் சொல்கிற பதில் என்ன?
’பரபர’ திரைக்கதையோட்டம்..!
சென்னை தலைமைச் செயலகத்தில் இருக்கும் பல்வேறு துறை அலுவலகங்களில், அது சார்ந்த அமைச்சர்களிடத்தில், அதிகாரிகளிடத்தில் என்ன காரியம் ஆக வேண்டும் என்றாலும், அதனை முடித்து தருகிற ‘மீடியேட்டர்’களில் ஒருவர் கிட்டு (விஜய் ஆண்டனி).
ஆனால், அதிகார அடுக்கில் மேலிருப்பவர்கள் அவரை ஒரு ‘பாலியல் தொழில்’ தரகராகவே நோக்குகின்றனர். அதிலொருவர், நாட்டின் பெரிய தொழிலதிபராகத் திகழும் அப்யங்கர் (சுனில் கிரிப்லானி). தொழில் நிறுவனங்கள் மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் நாடுகள் என்ன நிலைப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்கிற நபராகவும் அவர் இருக்கிறார்.
ஒரு நாட்டின் பொருளாதார நிலையை நிர்ணயிப்பது தொடங்கி அங்குள்ள மக்கள் பத்தாண்டுகள் கழித்து எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டும்? என்னவெல்லாம் அவர்களது ரசனையாகத் திகழ வேண்டும் என்று ஒவ்வொரு அசைவையும் கட்டுப்படுத்துகிறவராக இருக்கிறார்.
அப்படிப்பட்ட அப்யங்கரிடம் ‘அடிப்பொடி’யாக இருக்கிறார் கிட்டு. சரியாகச் சொன்னால், அப்படி ஒருவராகத் தன்னை அவரிடத்தில் காட்டிக் கொள்கிறார்.

ஒருமுறை ஒரு அப்பாவி மாணவனின் மரணத்திற்குக் காரணமாக இருக்கும் அப்யங்கரின் தங்கை கணவரைக் கொலை செய்யத் திட்டமிடுகிறார். கனகச்சிதமாக காய் நகர்த்தி, போதைப்பொருள் வழக்கில் கைதான ஒரு இளைஞரைக் கொண்டு அதனைச் செய்கிறார்.
இன்னொரு முறை ஒரு மத்திய அமைச்சருக்குச் சொந்தமான நிலத்தை அவரது உறவினர் பெயருக்கு மாற்றும் வேலையைச் செய்கிறார். ஆனாலும், அதன் பலன் ‘பூஜ்யம்’ ஆகிறது. காரணம், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின், அதனைத் தீர்மானிப்பவர்களின் சில நிலைப்பாடுகள்.
ஒருநாள் அந்த காரியத்தில் கிட்டு சம்பந்தப்பட்டிருக்கிற தகவல் அதிகார அடுக்கில் மேல்நிலையில் இருக்கும் சிலருக்குத் தெரிய வருகிறது. அது படிப்படியாகப் பரவி அப்யங்கர் காதிலும் விழுகிறது.
’கிட்டு ஒரு பிம்ப் ஆச்சே, அவன் இதுல எல்லாம் தலையிடுறானா’ என்று புருவத்தைச் சுருக்குகிறார் அப்யங்கர். அடுத்த நொடியே, டெல்லியிலிருந்து ஒரு சிறப்பு அதிரடிப் படை கிட்டுவை வட்டமிடுகிறது.
அடுத்தடுத்து நிகழும் விசாரணைகள், சோதனைகளை அடுத்து, கிட்டுவுக்குச் சொந்தமான இடங்களில் இருந்து சுமார் 6,000 கோடி ரூபாய் வரை பறிமுதல் செய்யப்படுகிறது. அவற்றில் கணிசம் பணமாகவே இருக்கிறது.
’இவ்வளவு பணத்தைக் கிட்டு சில ஆண்டுகளில் சம்பாதித்தது எப்படி?’ இந்தக் கேள்விக்குப் பதில்கள் தெரியவரும்போது, அதிகாரத்தில் இருக்கும் பலர் திகைத்துப் போகின்றனர்.
தன்னைச் சாணக்கியனாகக் கருதிக்கொள்ளும் அப்யங்கருக்கு அது பெருத்த அவமானமாகப் படுகிறது.
இந்த பணம் கைப்பற்றப்பட்ட வழக்குகளைச் சமாளிப்பதிலேயே கிட்டுவின் மீதமுள்ள வாழ்வும் ஆற்றலும் செலவழிய வேண்டும் என்று அவர் முடிவெடுக்கிறார்.
மறுபுறம், அப்யங்கரின் அத்தனை ஆண்டு காலத் தவத்திற்கு ‘ஆப்பு’ வைக்க முடிவு செய்கிறார் கிட்டு.
அப்படி என்ன விஷயத்தை அப்யங்கர் குறி வைக்கிறார்? அதற்கு கிட்டு தரும் இடையூறுகள் எத்தகையவை என்று சொல்கிறது ‘சக்தித் திருமகன்’ படத்தின் மீதி.
ஒரு சாதாரண ரசிகன் ‘லாபியிஸ்ட்னா என்னங்க’ என்று கேள்வி கேட்டு பதில் அறியும் விதமாக, இப்படத்தின் காட்சிகள் அமைந்துள்ளன.
ஒரு சதுரங்கப் பலகையில் இருக்கும் காய்களின் நகர்வை அதனை விளையாடுபவரே தீர்மானிப்பார். ஒரு நாட்டு மக்களின் வாழ்வை அப்படியொரு காய் நகர்த்தலாகக் கையாள்பவர்களைச் சிலர் ‘லாபியிஸ்ட்’ என்கின்றனர்.
அப்படிப்பட்ட இரண்டு லாபியிஸ்ட்களுக்கு இடையிலான கதையே ‘சக்தித் திருமகன்’.
வழக்கம்போல, அதிலொருவர் கோலியாத் ஆகவும் இன்னொருவர் டேவிட் ஆகவும் இருக்கிறார். அந்த டேவிட் தான் இப்படத்தின் நாயக பாத்திரமான கிட்டு என்பதைத் தனியே சொல்லத் தேவையில்லை.
மேற்சொன்னவற்றில் இருந்து, ‘சக்தித் திருமகன்’ பரபரவென்று நகர்கிற திரைக்கதையோட்டத்தைக் கொண்டிருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழும். அதனை மீறி நிற்கிறது அருண் பிரபு அமைத்துள்ள காட்சியாக்கம்.

திருப்தியளிக்கிறதா?
‘அருவி’, ‘வாழ்’ படங்களிலும் சமகால அரசியல், பொருளாதார, சமூக நிலைப்பாடுகளைக் கேள்விக்குட்படுத்தியிருந்தார் இயக்குனர் அருண்பிரபு. ஆனால், ‘சக்தித் திருமகன்’னில் அரசியல்வாதிகளின் கனவாக விளங்கும் அதிகார பீடங்களை கேள்விக்கு உட்படுத்தி இருக்கிறார்.
சில பாத்திரங்கள் நாம் செய்திகளில் பார்ப்பவையாகவும், மிகச்சில பாத்திரங்கள் சாதாரண மனிதர்கள் கேள்விப்பட்டிராததாகவும் இருக்கின்றன. அவை முன்வைக்கும் உலகம் இதுவரை நாம் கண்டிராதது. அதுவே ‘சக்தித் திருமகன்’னின் யுஎஸ்பி.
இது முழுக்க முழுக்க ஒரு ‘கமர்ஷியல்’ படம்.
ஜென்டில்மேன், சிவாஜி போன்ற ஷங்கர் படங்களைப் பார்க்கிற சாதாரண ரசிகனுக்கு எப்படியொரு ‘திரையனுபவம்’ கிடைக்குமோ, அதையே வேறு பாணியில் முன்வைக்கிறது ’சக்தித் திருமகன்’. அப்படங்களில் வருவது போன்றே ‘யதார்த்தம்’ குறித்த சில கேள்விகளையும் ‘டாக்குமெண்டரி’ பாணியில் முன்வைக்கிறது.
அதையும் மீறி, இந்தப் படம் சில விஷயங்களை முன்வைக்கிறது. குறிப்பாக, பெரியார் முன்வைத்த கருத்துகளைத் தமது மனதில் தாங்கி, ஊர் ஊராக அவற்றைச் சுவர்களிலும் சுவரொட்டிகளிலும் பிரதிபலித்த ‘கைமாறு கருதா’ தொண்டர்களின் ஓருருவமாக இப்படத்தில் வரும் வாகை சந்திரசேகரின் பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.
’பராசக்தி’, ‘மனோகரா’ காலகட்டத்தில் வசனங்கள் வழியே அப்படியொரு பாத்திர வார்ப்பை, அவற்றின் வழியே ரசிகர்களின் மன எழுச்சியை உருவாக்கியிருந்தார் கலைஞர் மு.கருணாநிதி. அண்ணா உட்பட அவருக்கு முன்னரும் பின்னரும் மிகச்சிலர் அப்படியொரு ‘மக்கள் கலைஞர்’களாகத் தம்மை வெளிப்படுத்தினர்.
அந்த வகையில், மக்களை ஜனநாயகத்தின் முதல் அடுக்காக நோக்குகிற ‘சக்தித் திருமகன்’ படத்தின் அடிநாதம் ஐம்பதுகளில் ‘பராசக்தி’ ரசிகர்களிடத்தில் ஏற்படுத்திய எழுச்சிக்கு நிகரானது. ஒருவேளை அந்த பெயரைத் தாங்கியிருந்தால், இப்படம் இன்னும் பெரிய கவனிப்பைக் கூடப் பெற்றிருக்கலாம்..!
இந்த படத்தில் தென்படுகிற மிகப்பெரிய குறை, நாயக பாத்திரம் செய்கிற குயுக்திகள் எளிதாக நம் புத்தியை எட்டுவதில்லை.
குறிப்பாக, இரண்டாம் பாதியில் பிட்காய்ன் சந்தையில் அவற்றை பணமாக மாற்றுவதும் அதனைக் கொண்டு சில சட்டவிரோதச் செயல்களை மேற்கொள்வதும் எப்படி நிகழ்கின்றன என்று யோசித்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் படம் முடிந்துவிடுகிறது.
போலவே, அப்யங்கர் பாத்திரம் பேசுகிற வசனங்களில் அதிகமாகச் சமஸ்கிருதமும் ஆங்கிலமும் மேலோங்கி நிற்கின்றன. அந்த உச்சரிப்பு நம் காதுகளை எட்டும் வகையில் ‘டப்பிங்’ பணி கனகச்சிதமாக அமையாததும் ஒரு குறையே.
பெட்டிக்கடை வைத்திருக்கிற ஒருவர் கோடிகளில் சம்பாதிக்கிறார் என்றாலே சட்டென்று சில நாட்களில் மோப்பம் பிடித்துவிடுகிற சாமர்த்தியசாலிகள் நம்மூரில் உண்டு. விசாரணை அமைப்புகள் எதிலும் இல்லாதவர்களே அதனை சாதிக்கும் சூழல் நிலவும் நிலையில் மத்திய, மாநில உளவுத்துறை முதல் அப்யங்கர் மாதிரியான ‘லாபியிஸ்ட்’களின் கழுகுப் பார்வை வரை எதிலும் படாமல் கிட்டு என்ற நபர் எப்படி தப்பியிருக்க முடியும்?
இந்த கேள்விக்கான பதிலைப் புறந்தள்ளிவிட்டால், ‘கமர்ஷியல் ஆக்ஷன் பொலிடிகல் ட்ராமா’ வகையில் ஒரு சிறப்பான ‘ரோலர் கோஸ்டர்’ திரையனுபவத்தை ‘சக்தித் திருமகன்’ தரும்.
‘என்ன நடக்கிறது’ என்று படம் பார்க்கிற ரசிகர்கள் யோசிக்க முடியாத அளவுக்கு ஒரு வேகம் இந்த படத்தில் இருக்கிறது. அதனைக் கொஞ்சம் தவிர்த்து நிதானத்தைச் சற்று கைக்கொண்டிருக்கலாம்.
ஒலி வடிவமைப்பு மட்டும் சற்றே ‘சொதப்பலாக’த் தெரிகிறது. சில இடங்களில் பின்னணி இசையின் விஸ்வரூபத்தைச் சற்று தணித்திருக்கலாம். சில இடங்களில் வசனங்கள் சட்டென்று (திட்டமிட்டு) நம்மைக் கடந்து போகின்றன.
மற்றபடி ஒளிப்பதிவாளர் ஷெல்லி ஆர்.கேலிஸ்ட், படத்தொகுப்பாளர்கள் ரேமண்ட் டெர்ரிக் க்ராஸ்டா, தின்சா, கலை இயக்குனர் ஸ்ரீராமன், ஸ்டண்ட் இயக்குனர் ராஜசேகர் மற்றும் டிஐ, விஎஃப்எக்ஸ், ஆடை வடிவமைப்பு எனப் பல தொழில்நுட்பக் கலைஞர்களின் அபார உழைப்பு இப்படத்தில் கொட்டப்பட்டிருப்பதைக் காண முடியும்.
ஒரு இசையமைப்பாளராக, ரசிகர்களை ‘கூஸ்பம்ஸ்’ ஆகச் செய்கிற உழைப்பைத் தந்திருக்கிறார் விஜய் ஆண்டனி. பாடல்கள், பின்னணி இசை இரண்டிலும் அது நன்றாக ‘வொர்க் அவுட்’ ஆயிருக்கிறது.

நடிப்பைப் பொறுத்தவரை விஜய் ஆண்டனி தொடங்கி நாயகி திருப்தி ரவீந்திரா, வில்லனாக வரும் சுனில் கிரிப்லானி எனப் பலர் ஈர்க்கின்றனர்.
விவேக்கின் உதவியாளராகவே இதுநாள் வரை நம் முன் நின்ற செல் முருகன் இதில் ஒரு குணசித்திர நடிகராகத் தெரிகிறார்.
வாகை சந்திரசேகர் வழக்கம்போலத் தன் பங்குக்கு ‘உற்சாகம்’ ஊட்டுகிறார். திராவிடச் சிந்தனையாக்கம் கொண்டவர்களுக்கு, குறிப்பாக எழுபது, எண்பது வயதினைத் தொட்டவர்களுக்கு அவரது பாத்திரம் உவகையூட்டும்.
இவர்கள் தவிர்த்து அதிரடிப்படை அதிகாரியாக வருபவர், அவரது உதவியாளராக வரும் ரியா ஜித்து, ஹைடெக் பாலியல் தொழிலாளியாக வரும் ரினி போட், அமைச்சராக வரும் ராஜேந்திரன் எனப் பலர் இதிலுண்டு.
இந்த படத்தில் வரும் சில பாத்திரங்களின் தோற்றம், பேச்சு, உடல்மொழி நிகழ்கால ஆளுமைகள் சிலரை நினைவூட்டுவதாகச் சில சர்ச்சைகள் எழலாம். வழக்கம்போல, ‘இப்படம் ஒரு கற்பனையே’ என்ற ‘டிஸ்க்ளெய்மர்’ உதவியுடன் அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றனர்.
ஆர்.கே.செல்வமணி போன்ற இயக்குனர்கள் இது போன்ற காட்சியாக்கத்தைத் தொண்ணூறுகளில் கையாண்டிருக்கின்றனர். அவரைப் போன்ற ஜாம்பவான்கள் சொல்கிற கருத்துகள் இப்படத்தை விளம்பரப்படுத்த நிச்சயம் உதவும்.
அனைத்தையும் தாண்டி, ‘சக்தித் திருமகன்’ என்பது யதார்த்தத்தைப் பிரதிபலிக்கிற ஒரு திரைப்படம் அல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும். வழக்கமான ‘ஹீரோயிச’ படங்களில் உள்ள ‘பேண்டஸி’யான விஷயங்கள் இதில் வேறு வடிவத்தில் வெளிப்பட்டிருக்கின்றன. அவ்வளவே..!
ஆனால், அதனை நேர்த்தியான திரைமொழியில் ரசிகர்கள் திருப்தியடையும் வண்ணம் பரிசளிப்பது சாதாரண விஷயமல்ல. அனேகமாக, அடுத்து தெலுங்கு, இந்தி திரையுலகில் இருந்து இயக்குனர் அருண் பிரபுவுக்கு ‘அட்வான்ஸ் மழை’ குவியும் என்று எதிர்பார்க்கலாம்..
இந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கிற சில விஷயங்கள் ஒரு சாதாரண பார்வையாளரைச் சற்றே சிந்திக்கத் தூண்டும்; சமகால அரசியல், சமூக பிரச்சனைகள் குறித்து கேள்விகளை எழ வைக்கும்.
அப்படியொரு சாத்தியக்கூறினைக் கொண்டிருப்பதால், எதிர்காலத்தில் இந்த கமர்ஷியல் படம் ‘கல்ட்’ அந்தஸ்தையும் பெறலாம். அதனைத் தனியே குறிப்பிடுவதற்கு ஏதுவான உள்ளடக்கத்தைத் தந்ததற்காக ‘சக்தித் திருமகன்’ குழுவினருக்குப் பாராட்டுகள்!