நாட்டையே உலுக்கிய கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதான டெய்லர் ராஜாவை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்திய நிலையில் இன்று மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். Tailor Raja Coimbatore Blast
கோவையில் கடந்த 1998ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆர்.எஸ்.புரம் டிபி ரோடு சந்திப்பில் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி வந்த போது மேடைக்கு அருகே குண்டு வெடித்தது. இதைத்தொடர்ந்து 14 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் 58 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 250 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த வழக்கு கோவை மாநகர போலீசாரிடம் இருந்து சிறப்பு புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் அல் உம்மா இயக்க நிறுவனர் பாஷா உள்ளிட்ட 166 பேர் கைது செய்யப்பட்டு பலருக்கும் தண்டனை வழங்கப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய டெய்லர் ராஜா கடந்த 28 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார்.
இந்நிலையில் கடந்த 10ம் தேதி கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் டெய்லர் ராஜாவை கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் வைத்து கைது செய்தனர். பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். டெய்லர் ராஜாவை 5 நாட்கள் மட்டும் விசாரிக்க 5 வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அனுமதி வழங்கினார்.
இதைத்தொடர்ந்து கடந்த 16ந்தேதி டெய்லர் ராஜாவை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் காவலில் எடுத்தனர். அவரிடம் கோவை காவலர் பயிற்சி வளாகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது 28 ஆண்டுகளில் அவர் எங்கெல்லாம் தலைமறைவாக இருந்தார். அவருக்கு உதவியது யார் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர்.
மீண்டும் சிறையில் அடைப்பு
இந்நிலையில் மருத்துவமனையில் சோதனை செய்த மருத்துவ ஆவணங்களுடன் திங்களன்று மாலை டெய்லர் ராஜாவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதைத்தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதையடுத்து டெய்லர் ராஜாவை வரும் 24ம் தேதி வரை கோவை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மீண்டும் டெய்லர் ராஜா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கர்நாடகா வீட்டில் சோதனை
கர்நாடக மாநிலம் விஜயபுராவில் உள்ள டெய்லர் ராஜா வீட்டிலும் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அவரது வீட்டில் சோதனை செய்தபோது ஷாஜகான் ஷேக் என்று தனது பெயரை மாற்றி வாழ்ந்துள்ளார் என தெரியவந்துள்ளது. ஷாஜகான் ஷேக் என்ற பெயரில் ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்ட ஆதாரங்கள் சிக்கி உள்ளன. மேலும் கோவை குண்டு வெடிப்புக்கு பிறகு வேறு எந்த குற்றச் சம்பவங்களிலும் டெய்லர் ராஜா ஈடுபடவில்லை என்று கூறப்படுகிறது. அங்கு டெய்லர் வேலை பார்த்து வந்த நிலையில் சொந்தமாக இடம் ஒன்றை வாங்கி வீடு கட்ட திட்டமிட்டிருந்தார் என்பது உள்ளிட்ட பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.