இந்தி நடிகர் ஷாரூக் கான் ஒரு இடத்தில் இருக்கிறார் என்றால், அங்கு கேளிக்கைக்குக் குறைவிருக்காது. 2000ஆவது ஆண்டுக்கு முன்னும் பின்னும் அவர் நடித்த பல படங்கள் அந்த எண்ணத்தைத் தரும். அதற்குக் கொஞ்சமும் குறை வைக்காமல், விழா மேடைகளில் தோன்றும்போதும் ‘உற்சாகம்’ உருவாக்குவார் ஷாரூக்.
’அவருடன் படப்பிடிப்புகளில் பங்கேற்ற அனுபவங்களை மறக்கவே முடியாது’ என்று பல நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தாங்கள் எதிர்கொண்ட கேளிக்கைகளை நிறையவே சொல்லி மகிழ்ந்திருக்கின்றனர்.
‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் நடித்தபோது, ஷாரூக்கானின் தயாரிப்பு நிறுவனம் தந்த விருந்தோம்பலைச் சிலாகித்திருக்கின்றனர் மறைந்த நடிகர் டெல்லி கணேஷ் மற்றும் மோகன் ராமன் உள்ளிட்ட சில கலைஞர்கள். அவர்கள் வழியே அவரது தயாரிப்பு நிறுவனத்தில் கிடைக்கிற வசதி வாய்ப்புகள் மிக அரிதான ஒன்று எனப் புரிந்து கொள்ள முடியும்.
அதனை மெய்ப்பிக்கும் வகையில், சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ஷாரூக் கானைப் புகழ்ந்திருக்கிறார் நடிகர் பொமன் இரானி. ’வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ஸின் மூலமான ‘முன்னாபாய் எம்.பி.பி.எஸ்’ஸில் பிரகாஷ் ராஜின் பாத்திரத்தில் முதலில் நடித்தவர் இவரே.
ஷாரூக் உடன் இணைந்து ‘டான்’ உட்பட 6 படங்களில் நடித்திருக்கிறார் பொமன் இரானி.

’ஷாரூக் பட செட்டுக்கு சென்றால், அவர் இருக்கும் அறை திறந்தே இருக்கும். ஏகப்பட்ட பேர் அதற்குள் வந்து போய் கொண்டிருப்பார்கள். ஸ்நாக்ஸ் மலை போல் குவிந்திருக்கும். விளையாட்டுகளுக்கும் பஞ்சம் இருக்காது. வேடிக்கைக்கும் பஞ்சம் இருக்காது’ என்று அவர் உடன் பணியாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார்.
கூடவே, ‘சாப்பாடு விஷயத்தில் அவரை மாதிரி போரடிக்கிற ஆளை பார்க்கவே முடியாது’ என்றும் கூறியிருக்கிறார்.
‘மேஜையில் விதவிதமான உணவுகள் கொட்டிக் கிடக்கும். ஆனால், ஷாரூக் தந்தூரி சிக்கனை மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருப்பார். உணவு விஷயத்தில் மட்டும் நமக்கு கம்பெனியே தர மாட்டார். அது மட்டுமல்லாமல், சாப்பிடாமல் தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பார். அவர் முன் இருக்கும் உணவு ‘ஜில்’லென்று ஆனாலும் பேசுவதை நிறுத்த மாட்டார். அதனால், சாப்பாடு விஷயத்தில் அவர் போர் அடிக்கிற ஒரு ஆள் தான்’ என்று தெரிவித்திருக்கிறார் பொமன் இரானி.