வன்னியர் சங்க இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு ராமதாஸும், அன்புமணியும் தனித்தனியே அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
வன்னியர் சமுதாயத்துக்கு வேலைவாய்ப்பும், இட ஒதுக்கீடும் வழங்க வேண்டுமென கோரி கடந்த 1987ல் நடந்த போராட்டத்தின் போது 21 பேர் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியாகினர்.
இவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17ஆம் தேதி வன்னியர் சங்க அமைப்புகள் மற்றும் பாமகவினரால் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பாமக நிறுவனர் ராமதாஸும், கட்சித் தலைவர் அன்புமணியும் திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க தலைமை அலுவலகத்துக்கு சென்று, உயிர் நீத்த 21 பேரின் உருவப்படங்களுக்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்துவார்கள்.
ஆனால் தற்போது பாமக இரண்டாக பிரிந்திருக்கிறது. ராமதாஸ் – அன்புமணி என இரு தரப்பாக செயல்பட்டு வருவதால் தற்போது, அக்கட்சித் தொண்டர்கள் மத்தியிலும் மோதல் போக்கு உருவெடுத்திருக்கிறது.
அதாவது வன்னியர் சங்க அலுவலகத்தில் இந்த ஆண்டு தியாகிகளுக்கு மரியாதை செலுத்த அன்புமணி தரப்பினர், அந்த அலுவலகத்தை தயார் செய்வதற்கு போலீசாரிடம் மனு கொடுத்து பணிகளை தொடங்கினார்.
ஆனால் அங்கு வந்த ராமதாஸ் தரப்பினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் இரு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு உண்டானது. ராமதாஸ் தரப்பு விழுப்புரம் மாவட்ட செயலாளர் ஜெயராஜ் தனது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன் வன்னியர் சங்க அலுவலகத்துக்கு வந்து பூட்டு போட்டுவிட்டார்.

இந்தசூழலில் போலீசார் இரு தரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு எட்டப்படாததால் வருவாய் துறையினர் வன்னியர் சங்க அலுவலகத்துக்கு சீல் வைத்துவிட்டனர்.
இதனால், நாளை (செப்டம்பர் 17) காலை திண்டிவனத்தில் உள்ள ஜேவிஎஸ் திருமண மண்டபத்தில் 21 தியாகிகளின் புகைப்படங்களை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் அன்புமணி, அங்கிருந்து 21 பேரும் சுட்டுக்கொல்லப்பட்ட 8 இடங்களுக்கு சென்றுவிட்டு, கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கொள்ளுக்காரன்குட்டையில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தவுள்ளார்.
ராமதாஸை பொறுத்தவரை நாளை காலை தைலாபுரம் தோட்டத்தில் 21 தியாகிகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, அங்கிருந்து கொள்ளுக்காரன்குட்டைக்கு புறப்படவுள்ளார்.
இதையொட்டி, ராமதாஸ் தரப்பில் கடலூர் பாமக மாவட்ட செயலாளர் கெஜனும், அன்புமணி தரப்பு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரனும் எஸ்.பி-யிடம் மனு கொடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி பண்ருட்டி டிஎஸ்பி ராஜா, அன்புமணி – ராமதாஸ் தரப்பினரை முத்தாண்டிகுப்பம் காவல் நிலையத்துக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
முதலில் ராமதாஸ் வந்து மரியாதை செலுத்திவிட்டு போகட்டும், அடுத்ததாக அன்புமணி தரப்பு வரட்டும், அவர்களை தொடர்ந்து வன்னியர் சங்க அமைப்பை நடத்தி வரும் காடுவெட்டி குரு மகன் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு போகட்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்.
யார்… யார்… எத்தனை மணிக்கு வருவீர்கள் என்று கேட்டதற்கு இரண்டு தரப்பினருமே மதியம் 2 மணிக்கு மேல்தான் வருவோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
அதன்படி, நாளை தைலாபுரம், கொள்ளுக்காரன்குட்டை பகுதிகளில் இரு தரப்பையும் சேர்ந்தவர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
ராமதாஸ், அன்புமணியை தொடர்ந்து வன்னியர் சங்க முன்னாள் தலைவர் காடுவெட்டி குருவின் மகன் கனலரசனும் கொள்ளுக்காரன்குட்டைக்கு வந்து 21 தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.