கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி நடிகர் விஜய்யின் தவெக பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர் . இந்த சம்பவம் நடந்த 4 ஆவது நாளான நேற்று நடிகர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் இதுவரை இல்லாத வகையில் கரூரில் மற்றும் இது போன்ற சம்பவம் நடக்க காரணம் என்ன என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த நிலையில் இன்று (அக்டோபர் 1) முன்னாள் அமைச்சரும் கரூர் எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரூர் சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம். யாராலும் நினைத்து பார்க்க முடியாத துயரம். பாதிக்கப்பட்ட மக்களை அன்று இரவே நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து அனைத்து உதவிகளையும் வழங்கிய முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலுனுக்கு நன்றி தெரிவிக்கிறோம்..
கரூர் மக்களுக்கு ஆதரவாக இருந்த அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு நன்றி. 50 ஆண்டுகால வயதில் 29 ஆண்டுகள் பொதுவாழ்வில் இருக்கிறேன். 1996-ல் இருந்து மக்களோடு இரண்டற கலந்து நிற்கிறேன்.
கரூர் மாவட்டத்தில் இதுவரை நடந்திடாத துயர சம்பவம் இது. இனி கரூரில் மட்டுமல்ல தமிழ்நாட்டில் எங்கும் நடைபெறாத வகையில் அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும்.
3 நாட்களாக பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கு சென்று உதவி செய்வதில் கவனம் இருந்தது. முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் அனைத்து உதவிகளையும் செய்துள்ளோம். கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுகிறோம். 108 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.
41 பேரில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 31 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவருடனும் ஒருவிதத்தில் நேரடியாக தொடர்பு கொண்டவன். கரூரில் இறந்த ஒரு இளைஞன், திமுக முப்பெரும் விழாவில் கலந்து கொண்டவர்; விஜய்யை வேடிக்கை பார்க்க சென்ற நிலையில் இறந்துள்ளார்.
லைட் அவுஸ் ரவுண்டானாதான் தவெக முதலில் கேட்ட இடம். அடுத்து கேட்ட இடம் உழவர் சந்தை. அதேபோல வேலுசாமிபுரம். இந்த 3-ல் எந்த இடத்தில் அதிக அளவு கூட்டம் கூட முடியும் என்பது அனைவருக்கும் தெரியும்.
லைட் அவுஸ் ரவுண்டானாவில் பெட்ரோல் பங்க், அமராவதி ஆறு பாலம் இருக்கிறது. அங்கே 7,000 பேர்தான் கலந்து கொள்ள முடியும். உழவர் சந்தையில் 2,000 பேருக்குதான் சேர் போட முடியும். வேலுசாமிபுரத்தில்தான் அதிக அளவு கூட்டம் நிற்க முடியும்.
திமுக முப்பெரும் விழாவில் 2 லட்சம் பேர் வருவாங்கன்னு எதிர்பார்த்தோம்.. 250 லட்சம் பேர் வந்தாங்க.. அதனால தனியாரிடம் ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கே நடத்தினோம். முப்பெரும் விழாவில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தோம்.
வேலுசாமிபுரத்தில் ஆயிரக்கணக்கான செருப்புகள் கீழே கிடந்தன; ஆனால் ஒரு குடிநீர் பாட்டில் கூட கீழே இல்லை. கூட்டம் நடத்தியவர்கள்தான் குடிநீர், பிஸ்கட் போன்றவற்றை செய்து தந்திருக்க வேண்டும். இதை குறையாக சொல்லவில்லை.
வேலுசாமிபுரத்தில் மாலை 4 மணிக்கு 4,000 முதல் 5,000 பேர் இருந்தனர். அப்போது விஜய் பேசியிருந்தால் அசம்பாவிதம் நடந்திருக்காது. காவல்துறை பாதுகாப்பு தரும்; அரசு இடம் கொடுக்கும். இவ்வாறு செந்தில் பாலாஜி கூறினார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், கரூர் துயர சம்பவங்கள் தொடர்பான சந்தேகங்கள், கேள்விகளை முன்வைத்து வீடியோக்கள் மூலமும் செந்தில் பாலாஜி பதில் அளித்தார்.
செந்தில் பாலாஜி பேட்டி முழுமையாக..