டிஜிட்டல் திண்ணை: செந்தில் பாலாஜியின் அடுத்த இன்னிங்ஸ்… சுப்ரீம் கோர்ட் தந்த சர்ப்ரைஸ்!

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்கு எதிராக தொடரப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் வழக்கு விசாரணை பற்றிய தகவல்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.Senthil Balaji next innings surprise Supreme Court

அவற்றை பார்த்து முடித்துவிட்டு வாட்ஸ்அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

“செந்தில் பாலாஜி அமைச்சராக இருப்பதால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெறும் தன் மீதான வழக்கு விசாரணையின் சாட்சிகளில் ஆதிக்கம் செலுத்துகிறார், எனவே அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கடந்த நவம்பர் மாதம் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கின் பல்வேறு கட்ட விசாரணைகள் தாண்டி கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி, ‘செந்தில் பாலாஜி ஜாமினில் வெளியே இருக்க வேண்டுமா அல்லது அமைச்சராக இருக்க வேண்டுமா என்பதை முடிவு செய்து ஏப்ரல் 28 திங்கள் கிழமை தெரியப்படுத்த வேண்டும்.’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் ஜாமீன் பெற்ற இரண்டு தினங்களிலேயே அமைச்சர் ஆனதையும் உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.

இனியும் உச்ச நீதிமன்றத்தின் அக்னி பார்வைக்கு ஆளாக வேண்டாம் என்பதால் ஏப்ரல் 27ஆம் தேதி மாலை செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். .

ஏப்ரல் 28ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில், வழக்கு விசாரணைக்கு வந்தபோது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் முக்குள் ரோத்தகி, கபில் சிபல் ஆகியோர் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று செந்தில் பாலாஜி ஏப்ரல் 27 ஆம் தேதி,  தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டார் என்ற தகவலை தெரியப்படுத்தினர்.

அப்போது அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘ இந்த வழக்கு விசாரணை முடியும் வரை செந்தில் பாலாஜி உயர் பதவிகளை வகிக்க கூடாது என்ற நிபந்தனையை உச்ச நீதிமன்றம் விதிக்க வேண்டும் என  வாதிட்டார்.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பின் வழக்கறிஞர் கபில் சிபில், ‘இந்த வழக்கு 15 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும். அதுவரை செந்தில் பாலாஜி எந்த பதிவையும் வகிக்க கூடாதா?’என்று கேட்டார்.

அப்போது  துஷார் மேத்தா, ‘அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் இப்படிப்பட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இதற்கு முன்மாதிரி இருக்கிறது. இப்படி நிபந்தனை விதிக்கவில்லை என்றால் செந்தில் பாலாஜி அடுத்த ஒரு மாதத்தில் மீண்டும் அமைச்சராகி விடுவார்’ என்று வாதிட்டார்.

அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதி ஓகா, ‘செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர் பதவி ஏற்று விடுவார் என்று நீங்கள் அச்சப்படுகிறீர்கள். அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகுங்கள்’ என்று பதில் அளித்தார். Senthil Balaji next innings surprise Supreme Court

மேலும் இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்காமல் செந்தில் பாலாஜியின் ஜாமினை எதிர்த்த மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.

இன்றைய வழக்கு விசாரணை போக்குகளை அறிந்த செந்தில் பாலாஜி தனக்கு நெருக்கமானவர்களிடம், ‘பி எம் எல் ஏ வழக்கின் ஜாமீனை ரத்து செய்ய நீதிமன்றம் அனுமதிக்காது. இன்று உச்ச நீதிமன்றம் அமலாக்கத்துறையின் கோரிக்கைகள் எதையும் ஏற்கவில்லை. நான் மீண்டும் அமைச்சர் பதவி ஏற்பதற்கு  எந்த பிரச்சனையும் வராத வகையில் விரைவில் உச்சநீதிமன்றத்திலேயே சட்ட ரீதியான நிவாரணம் கிடைக்கும்.  அங்கிருக்கும் வழக்கறிஞர்களும் இதைத்தான் தெரிவிக்கிறார்கள்’ என்று நம்பிக்கையாக தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரும் தனக்கு நெருக்கமானவர்களிடம் செந்தில் பாலாஜி விவகாரத்தில் இது ஒரு சிறு தடை தான். விரைவில் சட்ட ரீதியாக இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டு அவர் மீண்டும் அமைச்சர் ஆவார் என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

அதாவது இதே ஆட்சி காலத்தில் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக வருவார் என்பதுதான் ஸ்டாலினுடைய நம்பிக்கையாக இருக்கிறது. Senthil Balaji next innings surprise Supreme Court

அதுவரைக்கும் செந்தில் பாலாஜிக்கு கொங்கு மண்டல தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே  அழகிரிக்கு தென்மண்டல அமைப்புச் செயலாளர் என்ற பதவி வழங்கப்பட்டது போல, செந்தில் பாலாஜிக்கு மேற்கு மண்டல அமைப்புச் செயலாளர் என்ற பதவி வழங்கப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை என்பது கரூர் வட்டாரத்தின் நம்பிக்கையாக இருக்கிறது” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது  வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share