சிபிஐ விசாரணை : டெல்லி புறப்பட்ட செந்தில் பாலாஜி

Published On:

| By Kavi

கரூர் பெருந்துயர வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதற்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

கரூர் பெருந்துயரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவு படி, சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று (மார்ச் 15) மூன்றாவது முறையாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

இந்த வழக்கில் கரூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தவெக குற்றம்சாட்டியுள்ளது. நேற்று விஜய்யிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியிருக்கின்றனர். அதற்கு விஜய்,  “செந்தில் பாலாஜி ஆட்கள்தான் கரூர் கூட்டத்துல மயக்க மருந்து ஸ்பிரே பண்ணினாங்க.. அதனால மயங்கி விழுந்தாங்கன்னு எங்க கட்சிக்காரங்க எனக்கு கடிதம் அனுப்பி இருக்காங்க.. பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவங்க என்கிட்ட பேசுறப்பவும் இதையேதான் சொன்னாங்க” என்று கூறியிருக்கிறார்.

இந்தசூழலில் சிபிஐ சம்மன் அனுப்பியதன் பேரில், விசாரணைக்கு ஆஜராவதற்காக இன்று இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுள்ளார் செந்தில் பாலாஜி. நாளை காலை சிபிஐ அதிகாரிகள் முன் செந்தில் பாலாஜி ஆஜராகவுள்ளார்.

ADVERTISEMENT

இதற்கிடையே இன்று (மார்ச் 15) கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் செந்தில் பாலாஜி டெல்லி செல்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு அவர், “41 பேர் உயிரிழந்த சம்பவத்தின் போது, அங்கு எந்த விளம்பரமும் இல்லாமல் முதலில் சென்றவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்தான்.  ஆனால் திமுக மருத்துவர் அணி என 10 ஆம்புலன்ஸ்களை எடுத்துக்கொண்டு வந்து செந்தில் பாலாஜி லைவ் கவரேஜ் செய்துகொண்டிருந்தார். விடிய விடிய போஸ்ட் மார்ட்டம் நடந்தது. ஆனால்  விளாத்திக்குளம் மாணவி வழக்கில் இன்னும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வரவில்லை.  

ADVERTISEMENT

இதையெல்லாம் பார்த்தால் நமக்கு சந்தேகம் வருமா இல்லையா? 10 ரூபாய் பாலாஜி என்று சொன்னவுடன் தான் செருப்பு வீசப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியிடம் கண்டிப்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். உண்மை வெளியே வர வேண்டும். 

சிபிஐ விசாரணைக்கு செல்வதால் கடந்த ஒரு வாரமாக அவர் மிகவும் பதற்றமாக இருக்கிறார். செய்தியாளர்கள் கேள்வி கேட்டால் அவர்கள் மீது பாய்கிறார்” என்று குற்றம்சாட்டியுள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share