நடிகர் விஜய் மீது செருப்பு வீசப்பட்டது தொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
கரூரில் நடிகர் விஜய் கலந்து கொண்ட தவெக பிரச்சார கூட்டத்தில் சிக்கி 41 பேர் பலியாகிய நிலையில் 4 ஆவது நாளான நேற்று விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் மற்ற இடங்களில் எல்லாம் இல்லாமல் இங்கு மட்டும் எப்படி நடந்தது என்று கேட்டு இருந்தார்.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 1) முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “விஜய் வண்டியின் மேலே சென்று பேச ஆரம்பித்த 3.5 – 3.31 நிமிடம் வரை என்னைப் பற்றி பேசிவிட்டு கடைசியாக பேசுகிறேன் என்று சொல்லி தேர்தல் வாக்குறுதிகள் குறித்து பேச ஆரம்பித்தார். பேச ஆரம்பித்த 5.35 நிமிடத்தில் கரூர் விமான நிலையம் பற்றி பேசினார்.
6 ஆவது நிமிடத்தில் மயங்கி விழுந்தவர்களின் பகுதிகளில் இருந்து முதல் முறையாக செருப்பு வீசப்பட்டது. இது அவர்கள் பேச ஆரம்பித்த ஆறாவது நிமிடத்தில் இந்த சம்பவம் நடந்தது. 6.40 மணியளவில் மீண்டும் இரண்டாவது முறை செருப்பு வீசப்பட்டது.
7.12 மணிக்கு அரசியல் கட்சியின் தலைவருடைய உதவியாளர் அவரிடம் சென்று நிறைய பேர் மயக்கம் போடுகின்றனர் என்று சொல்கின்றார். இதை நீங்கள் எல்லோரும் லைவ்வில் பார்த்தீர்கள்.
அதன் பிறகு அவர்கள் ஆம்புலன்ஸை அழைக்கின்றனர். வந்த ஆம்புலன்ஸில் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றுகின்றனர். இது எல்லாம் அவர் வண்டியின் மேல் அவர் பேசி ஆரம்பித்த 14 ஆவது நிமிடத்தில் பலரும் மயக்கம் அடைவதாக பாதுகாவலர் அவரிடம் தெரிவிக்கிறார்.
மொத்தம் விஜய் 19 நிமிடம் பேசிய நிலையில் 16 வது நிமிடத்தில் தான் அவர் என்னைப் பற்றி பேசினார். அவர் பேச ஆரம்பித்த முதல் ஐந்தாவது நிமிடத்திலேயே இந்த சம்பவங்கள் நடந்தது. 19ஆவது நிமிடத்தில் கூட்டம் முடிந்தது.
இப்படி எந்த நேரத்தில் எது நடந்தது என்று தெரியாமல் சமூக வலைதளங்களில் தமிழ்நாடு அரசின் மீது இந்த தவறுகளை திருப்பி விட வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு சாரர் தகவல் பரப்பி வருகின்றனர்.” என்றார்.