கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி இன்று (மார்ச் 31) தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். புலியகுளம் விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பிரச்சாரத்தை துவக்கி அவர் மக்களிடையே சிறிது தூரம் நடந்து சென்று ஆதரவு திரட்டினார். இந்த நிகழ்வில் திமுக கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அவர், “கோவை தெற்கில் 2026ஆம் ஆண்டு உதய சூரியன் உதிக்கும். சட்டமன்ற உறுப்பினராக தெற்கு தொகுதி வெற்றியை உங்கள் ஆசியோடு, அனைவரின் ஆதரவோடு முதலமைச்சர் கரங்களில் சமர்ப்பிப்போம் என்பதை இந்தப் பிரச்சாரத்தின் வாயிலாக சூளுரைத்துக் கொள்கிறோம்” என்றார்.
மேலும், “கடந்த ஐந்து ஆண்டுகளில், 2021 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணிக்கு இங்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி வாய்ப்பு இல்லாத நிலையிலும், 234 தொகுதிகளுக்கும் தமிழக முதலமைச்சரே சட்டமன்ற உறுப்பினராக இருந்து கோவைக்கு பல்வேறு சிறப்புத் திட்டங்களை வழங்கியுள்ளார்.
‘குறிப்பாக செம்மொழிப் பூங்கா, பெரியார் நூலகம், ஜி.டி. நாயுடு மேம்பாலம், கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கான நிலம் எடுப்பதற்கான நிதி, தங்க நகைப் பூங்கா அமைப்பதற்கான திட்டம் ஆகியவற்றைத் தொடங்கி வைத்தார். கோவையின் வளர்ச்சியில் சிறப்புக் கவனம் செலுத்தி, கோவை மாநகராட்சியில் மட்டும் இந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.8,200 கோடி அளவுக்கு பல்வேறு சிறப்புத் திட்டங்களுக்கு முதல்வர் நிதி ஒதுக்கியுள்ளார்.
இந்தத் திட்டங்களுடன் சேர்த்து பல்வேறு வாக்குறுதிகளையும் நிறைவேற்றிட, வரும் 2026ஆம் ஆண்டு கோவையில் உதயசூரியன் வெற்றி பெற வேண்டும். அதற்கு கழக நிர்வாகிகளும், தோழமை இயக்கங்களும், நிர்வாகப் பெருமக்களும் சிறப்பாகப் பணியாற்றி மகத்தான வெற்றியை உருவாக்கித் தர வேண்டும்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய செந்தில் பாலாஜி, “காலையில் கரூர் சட்டமன்றத் தொகுதியில் அங்கு அறிவிக்கப்பட்ட வேட்பாளருக்கான பிரச்சாரத்தைத் தொடங்கியபோது, ‘நீங்கள் கரூரிலிருந்து கோவைக்கு ஏன் செல்கிறீர்கள்’ என்று கேட்டார்கள். நான் காலையில் சொன்னதை இங்கே நினைவு கூற விரும்புகிறேன். கரூரும் கோவையும் எனக்கு இரு கண்களைப் போல. தலைவர் கட்டளையிட்டிருக்கிறார். கோவையில் நிச்சயமாக வெற்றியைத் தலைவர் கரங்களில் சமர்ப்பிப்பேன்.
கோவையின் வளர்ச்சிக்கு இந்நாள் மட்டுமல்ல, எந்நாளும் உங்களில் ஒருவனாக, சகோதரனாக இருந்து முதல்வரின் திட்டங்களை கொண்டு வந்து சேர்க்கப் பாடுபடுவேன்” என்றார்.
மேலும், “கோவையில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் கோவை தெற்கு தொகுதியை முதன்மைத் தொகுதியாக, வளர்ச்சி பெற்ற தொகுதியாக, அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்ட தொகுதியாக மாற்றப் பாடுபடுவோம்” என்றார்.
இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செந்தில் பாலாஜி, முதல்வர் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியுள்ளார், மகத்தான வெற்றியை தலைவருக்கு சமர்ப்பிப்பேன், குறிப்பாக தெற்கு தொகுதியில் மகத்தான வெற்றியை சமர்ப்பிப்போம் என தெரிவித்தார்.
திமுகவில் வாய்ப்பு கிடைக்காததற்கு யாரும் ஆதங்கம் பட வேண்டாம். வாய்ப்புகள் வழங்குவது குறித்து தலைவர்தான் முடிவு செய்வார். இந்த சட்டமன்றத் தேர்தலில் 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் வாக்கு எண்ணிக்கை நாளில் பொறுத்திருந்து பார்க்கலாம் என தெரிவித்தார்.
நான் எந்த தொகுதியில் நிற்பது என முடிவெடுப்பது முதல்வர்தான், நான் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை. கூட்டணி கட்சிகள் எந்த தொகுதியில் நிற்க வேண்டும் என்பதையும் தலைமை தான் முடிவு எடுக்கும் என்று கூறினார்.
கோவை தெற்கு தொகுதியில் இந்த முறை உதயசூரியன் வெற்றி பெறும். 2ம் தேதி முதல்வர் கோவையில் 7 தொகுதிகளுக்கான பரப்புரையை மேற்கொள்கிறார்.
விஜயின் வாக்கு திமுகவின் வாக்கை சிதறடிக்குமா? என்ற கேள்விக்கு எங்களது வாக்கு எங்களிடம் உள்ளது என்று பதில் அளித்தார். மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் 80 அடி சாலையில் மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
