தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாளை (செப்டம்பர் 27) ஆம் தேதி கரூர், நாமக்கல் மாவட்டங்களில் ‘மக்கள் சந்திப்பு’ பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில், கூட்டத்தை ஒழுங்குப்படுத்த தன்னார்வலர்களுக்கு தவெக பயிற்சி அளித்துள்ளது.
தவெக தலைவர் விஜய் திருச்சி, அரியலூர், திருவாரூர், நாகையை தொடர்ந்து நாளை கரூர், நாமக்கலுக்கு செல்கிறார்.
இதையொட்டி கரூர் மாவட்டத்தில் உள்ள லைட் ரோஸ் கார்னர், கரூர் உழவர் சந்தை, வேலுசாமிபுரம் ஆகிய இடங்களில் அனுமதி வழங்குமாறு போலீசாரிடம் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அனுமதி கோரினார். இதுதொடர்பாக மாவட்ட எஸ்.பி.ஜோஷ் தங்கையாவையும் சந்தித்து பேசினார்.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கே.எஸ்.திரையரங்கம் அருகில் காலை 8.45 மணிக்கும், கரூர், வேலுசாமிபுரத்தில் நண்பகல் 12.00 மணிக்கும் பிரச்சாரம் மேற்கொள்ள போலீசார் அனுமதி வழங்கினர்.
தவெக தலைமை சார்பில் நாமக்கல்லில் பகல் 12 மணிக்கும், கரூரில் 3 மணிக்கும் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
எனவே போலீசார் அனுமதித்த நேரத்திலேயே பிரச்சாரம் மேற்கொள்ள தவெகவினர் தயாராகி வருகின்றனர்.
முன்னதாக திருச்சி, நாகை, திருவாரூர் பிரச்சாரத்தின் போது, தவெக தொண்டர்களும் விஜய் ரசிகர்களும் பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியதாகவும், கோயில் மீது செருப்பு, ஷூ போட்டுக்கொண்டே ஏறியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதோடு தவெக தொண்டர்களும், இளைஞர்களும் ஆபத்தை உணராமல், மின் கம்பத்தில் ஏறுவது, மரங்களில் ஏறுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதுபோன்ற சமயங்களில் எதாவது அசாம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு? தலைவராக இருக்கும் நீங்கள்தானே கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் எனறு சென்னை உயர் நீதிமன்றமும் அறுவுறுத்தியது.
இந்நிலையில் தான் கரூர், நாமக்கல் மாவட்டத்தில் விஜய் பிரச்சார வாகனம் செல்லும் ஒவ்வொரு பாய்ண்டிலும், பொதுமக்களை ஒழுங்குப்படுத்தும் வகையில் தலா 300 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது தவெக தலைமை.
அதாவது, ‘கூட்டத்துக்கு வரும் இளைஞர்கள் மின் கம்பங்கள், பில்டிங் மேற்கூரை, பிளக்ஸ் போர்டுகள் மீது ஏறுவதை தடுப்பது, வரக்கூடிய வாகனங்களை ஒழுங்குப்படுத்தி போக்குவரத்தை சரி செய்வது’ உள்ளிட்ட பணிகளை செய்ய அறுவுறுத்தப்பட்டுள்ளனர்.
காவல்துறை செய்யக்கூடிய வேலைகளை தன்னார்வலர்கள் செய்வதற்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மற்றும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த தன்னார்வலர்களுக்கு காவல்துறையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர்கள் பயிற்சி அளித்துள்ளனர்.
இப்படி தவெக பிரச்சாரத்துக்கு தயாராகி வரும் நிலையில், தனது சொந்த மாவட்டத்தில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள வருவதால் கூட்டத்தை தடுக்க பல்வேறு முயற்சிகளை முன்னாள் அமைச்சரும், திமுக மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜி செய்து வருகிறார் என்கிறார்கள் தவெக வட்டாரத்தில்.
எனவே, செந்தில் பாலாஜி திட்டத்தை முறியடிக்க தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான குழு நேற்று முன்தினமே, கரூர் மாவட்டத்தில் களமிறங்கியுள்ளது.
அவர்கள் கரூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளை அழைத்து பேசியிருக்கின்றனர்.
நிர்வாகிகள் மத்தியில் புஸ்ஸி ஆனந்த் பேசும் போது, ”ஆர்டிஓ அலுவலம் மூலமாக தனியார் வாகனங்கள், வேன், வாடகை டாக்ஸி, பஸ் போன்ற வாகனங்கள் விஜய் பிரச்சாரத்திற்கு போகக்கூடாது என்று வாகன உரிமையாளர்களுக்கு தடை போடப்பட்டிருக்கிறது.
ஈரோடு இடைத்தேர்தல் சமயத்தில் செந்தில் பாலாஜிக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மாற்றுக்கட்சினர் பிரச்சாரத்திற்கு வரும்போது அந்தப் பகுதி மக்கள் பிரச்சாரத்திற்கு போகாத அளவிற்கு பட்டிகளில் அடைப்பது போல் அடைத்து அவர்களுக்கு இலவசம் கொடுத்து தடுத்து நிறுத்தினார்.
அதுபோன்று நாளை நடைபெறக்கூடிய விஜய் பிரச்சாரத்திற்கு கூட்டம் போகாத அளவிற்கு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் இலவச பொருட்கள் கொடுக்க முடிவு செய்திருக்கிறார்கள். நமது கட்சியில் உள்ள ஒன்றிய, நகர நிர்வாகிகளையும் செந்தில் பாலாஜியுடைய ஆதரவாளர்கள் பேசி தடுத்து நிறுத்த முயற்சி செய்து வருகின்றனர்.
இப்படி, ஆளுங்கட்சியினர் நமது பிரச்சாரத்திற்கு கூட்டம் வராத அளவுக்கு தடை போட்டு வருகின்றனர். அதையெல்லாம் முறியடிக்கும் வகையில் நீங்கள் கடுமையாக வேலை செய்ய வேண்டும். வாகனங்களை கொடுக்காத அளவுக்கு வாகன உரிமையாளார்களை கடுமையாக எச்சரித்துள்ளனர். அதனால் சொந்த வண்டி வைத்திருக்கும் நிர்வாகிகள் முன்கூட்டியே கூட்டத்தை அழைத்து வர வேண்டும்.
நமது தலைவருக்காக மக்கள் வருவதற்கு தயாராக இருக்கிறார்கள். அவர்களை முன்கூட்டியே ஏற்பாடு செய்து பிரச்சார இடத்திற்கு அழைத்து வந்து விடுங்கள். அதேபோல நிர்வாகிகளை திமுகவினர் விலைக்குப் பேச முயற்சி செய்து வருகிறார்கள். அதற்கெல்லாம் நீங்கள் பலியாகி விடக்கூடாது. நாளை ஒருநாள் கஷ்டப்பட்டு மக்கள் கூட்டத்தைக் கூட்டுங்கள் கரூரில் நடக்கக்கூடிய பிரச்சாரம் செந்தில் பாலாஜி உணரக்கூடிய வகையில் இருக்க வேண்டுமென அறிவுறுத்தினார்” என்கிறார்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட சில தவெக நிர்வாகிகள்.
கரூர் மாவட்டத்துக்கு தனியே 10 நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும், நாமக்கல் மாவட்டத்துக்கு தனியே 10 நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும் புஸ்ஸி ஆனந்த் நியமித்திருக்கிறார். இவர்கள் தலைமையில் தன்னார்வலர்கள் செயல்படவுள்ளனர்.
அதோடு, நீதிமன்ற உத்தரவுபடி அனுமதி இல்லாத இடத்தில் ப்ளக்ஸ் பேனர்கள் வைக்கக்கூடாது. கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. கூட்டத்தில் பிறர் மனம் புண்படும்படி யாரும் பேசவோ, நடந்துகொள்ளவோ கூடாது. பட்டாசு வெடிக்கக்கூடாது உள்ளிட்ட அறிவுறுத்தல்களும் தவெக தலைமையால் வழங்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே கரூரில் செப்டம்பர் 17ஆம் தேதி திமுகவின் முப்பெரும் விழா நடந்தது. அதைத்தொடர்ந்து கரூர் வேலுசாமி புரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அதே இடத்தில் தான் நாளை விஜய் பிரச்சாரம் செய்கிறார்.
திமுக முப்பெரும் விழாவுக்கு சுமார் 30 கோடி ரூபாய்க்கு மேல் செந்தில் பாலாஜி செலவு செய்திருக்கிறார். எடப்பாடியின் பிரச்சார கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் 10 கோடி ரூபாய் வரை செலவு செய்திருக்கிறார்.
இந்தநிலையில் நாளை விஜய் பிரச்சாரத்துக்கு எவ்வளவு கூட்டம் கூடும் என கரூர் மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.