2016 கணக்கு.. சிபிஎம்-க்கு நினைவூட்டும் மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வன்

Published On:

| By Mathi

CPM DMK Talks ASP

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தை மிகப் பெரும் இழுபறிக்கு பின் சுமூகமாக முடிவுக்கு வந்தது. காங்கிரஸுக்கு 28 தொகுதிகளை ஒதுக்கி உள்ளது திமுக.

திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2, மமகவுக்கு 2 , மதிமுகவுக்கு 4, கொமதேகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டன.

ADVERTISEMENT

தேமுதிக பரவலாக அனைத்து தொகுதிகளிலும் அனைத்து ஜாதியினரையும் கொண்ட கட்சியாக இருப்பதால் ஏற்கனவே 10 தொகுதிகளை ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளது.

சிபிஐ கட்சிக்கு திமுக 5 இடங்களை கொடுக்க முன்வந்துள்ளது. கடந்த தேர்தலைப் போலவே 6 தொகுதிகளைக் கேட்ட சிபிஐக்கு, புதிய கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளதால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை சுட்டிக்காட்டியது திமுக. இதனையடுத்து 5 தொகுதிகளை ஏற்கும் மனநிலையில் இருக்கிறது சிபிஐ.

ADVERTISEMENT

அதே நேரத்தில் சிபிஎம் கட்சியோ, கடந்த தேர்தலில் கொடுக்கப்பட்ட 6 தொகுதிகளை விட கூடுதலான தொகுதிகளை ஒதுக்க கோரி வருகிறது. சிபிஎம் கட்சிக்கும், கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் ஏற்பட்டிருக்கும் இக்கட்டமான சூழலை சுட்டிக்காட்டியது திமுக பேச்சுவார்த்தைக் குழு.

ஆனால் சிபிஎம் தலைவர்கள், கூட்டணிக்கு புதியதாக வந்த தேமுதிகவுக்கு 10 தொகுதிகளை ஒதுக்கும் நிலையில் தங்களுக்கும் கூடுதலான தொகுதிகள் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

ADVERTISEMENT


சிபிஎம் கட்சியின் இந்த நிலைப்பாடு தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வன் கூறியதாவது: இன்றைக்கு திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக, மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள்தான் 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கி இருந்தன. அந்த மக்கள் நலக் கூட்டணிக்கு தலைமை தாங்கியது தேமுதிக. இந்தக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த்.

2016 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக 104 இடங்களில் போட்டியிட்டது. மதிமுக 29 இடங்களிலும் விசிக-சிபிஐ-சிபிஎம் கட்சிகள் தலா 25 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இந்தக் கூட்டணியால் வெற்றி பெற முடியவில்லை.

இதன் பின்னர் கடந்த 2021 தேர்தலில் மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம் கட்சிகள் திமுக கூட்டணியில் இணைந்தன. அதே கூட்டணியில் தொடருகின்றன.

இந்த 2026 தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற வேண்டும் என விருப்பம் தெரிவித்து பேட்டிகளை கொடுத்தவர்கள் திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்கள்தான்.. தேமுதிக கூட்டணியில் இணைந்த போது வெளிப்படையாக வரவேற்றவர்களும் இவர்கள்தான்..

இத்தேர்தலில் திமுக கூட்டணியில் 9 புதிய கட்சிகள் இணைந்துள்ளன. இதனால் திமுக கூட்டணியில் ‘இடநெருக்கடி’ ஏற்பட்டிருப்பது இயல்பானதுதான்.

இந்த யதார்த்தத்தின் அடிப்படையில்தான் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக, கடந்த தேர்தலில் போட்டியிட்ட இடங்களை விட குறைவான எண்ணிக்கையில் போட்டியிட இருக்கிறது.

ஆனால் சிபிஎம் கட்சி அதெப்படி தேமுதிகவைவிட எங்களுக்கு குறைவான இடங்களா? என பேசுவதில் எந்த லாஜிக்கும் இருப்பதாக தெரியவில்லை.

திமுக கூட்டணியில் இணைந்துள்ள 9 புதிய கட்சிகளின் தொண்டர்களும் சிபிஎம் உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கும் பாடுபடப் போகிறவர்கள்தானே.. எல்லோரும் இணைந்துதானே களத்தில் ஒன்றாக உழைக்கப் போகிறார்கள்.

3 விஷயங்களை இதில் பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

முதலில், அரசியலில் தவறான கணக்கு போட்டு அதற்கான விலையை ஒரு முறை கொடுத்த அரசியல் கட்சிகள் தமிழகத்தில் அனைத்து கட்சிகளுக்குமான வரலாறு. ஆனால், பல முறை தவறான முடிவுகளையும் அலசல்களையும் பண்ணுவதாக சிபிஎம் (CPM) இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. இடதுசாரி சக்திகள் குறைவது இன்றைய காலத்தில் நல்லதல்ல.

ஆனால், அவர்களது சமீபத்திய வரலாற்றைப் பார்க்கும்போது முக்கியமான தருணங்களில் தவறான முடிவுக்கு எப்படி வந்து சேர்கிறார்கள் என்ற ஆச்சரியம் எனக்குள் உண்டு.

இரண்டாவதாக, 1996-ஆம் ஆண்டு கலைஞரும் மூப்பனாரும் அமைத்த கூட்டணியில் நல்லகண்ணு தலைமையிலான சிபிஐ (CPI) இடம் பெற்றது. ஆனால் சிபிஎம் இடம் பெறவில்லை.

விளைவு, சிபிஎம்-க்கு சட்டமன்றத்தில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

அதே போன்ற நிலைதான் 2016-ல் மக்கள் நலக் கூட்டணி அமைத்த போதும் சிபிஎம் கட்சிக்கு நிகழ்ந்தது.

சட்டென்று நிதானித்துக்கொண்டு திருத்திக்கொள்ளக்கூடிய தன்மையை இடதுசாரிகள் பெற வேண்டியது இன்றைய காலத்தின் மிக முக்கிய அவசியம்.

மூன்றாவதாக, இன்று இந்தியாவில் 5 இடதுசாரி எம்.பி.க்கள்தான் லோக்சபாவில் இருக்கிறார்கள். அதில் 4 பேர் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். இதை நினைவில் கொண்டால்தான் எவ்வாறு ஆட்சியை செய்வது, எவ்வளவு இடங்களில் போட்டியிடுவது, தங்கள் வலிமை என்ன என்பதையெல்லாம் புரிந்து கொள்ள முடியும்.

5 எம்.பி.க்கள் இருக்கக்கூடிய இடதுசாரிகளுக்கு 4 எம்.பி.க்கள் தமிழ்நாட்டில் இருந்து வந்தது என்பதை நினைவில் கொண்டால் இது போன்ற கோரிக்கைகளுக்கு இடம் இருக்காது என்று நம்புகிறேன்.

மாமியார் உடைத்தால் மண்பாண்டம், மருமகள் உடைத்தால் பொன்பாண்டம் என்ற பார்வையிலிருந்து சற்று இங்கு விலகி, இடதுசாரிக் கொள்கைகளுக்கு மேலும் வலுவூட்ட சிபிஎம் (CPM) முடிவு எடுக்க வேண்டும் என்பதே எங்கள் அவா. இவ்வாறு ஏ.எஸ். பன்னீர்செல்வன் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share