அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவின் அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் கட்சி பதவிகளில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.
அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி கோபிசெட்டிபாளையம் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து மனம் திறந்து பேசினர். அப்போது அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என தெரிவித்ததோடு பத்து நாட்கள் கெடு விதித்தார். இதை தொடர்ந்து நேற்று(செப்டம்பர் – 6) செங்கோட்டையனை அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆகிய கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்தார்.
இந்நிலையில் நாளை மறுநாள் செங்கோட்டையன் மீண்டும் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியவர்களை ஒருங்கிணைத்து தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதற்கிடையே நேற்று தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் இன்று காலை ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சார்பு செயலாளர்கள், கிளைக்கழச் செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருப்பவர்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அந்த கடிதத்தில், அதிமுக பழைய வலிமை பெற வேண்டும். வெற்றி பாதையில் பயணிக்க வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் மக்களுக்கு பயனுள்ள ஆட்சி அமைய வேண்டும். இந்த நல்ல நோக்கம் நிறைவேற கழகத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேர வேண்டும் என்ற தொண்டர்களின் உள்ளத்தில் இருக்கும் கருத்துகளை செங்கோட்டையன் கூறினார். அதற்கு தாங்கள் கழக பொறுப்பிலிருந்து செங்கோட்டையனை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கழக பதவியிலிருந்து விலகுகிறோம். கழகம் ஒன்று பட்டால் பதவியில் நீடிக்கிறோம் என கூறப்பட்டுள்ளது.
செங்கோட்டையன் ஆதரவாளர்களின் இந்த முடிவு அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.