பல்வேறு நண்பர்கள் என்னிடத்தில் பேசுகிறார்கள். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது சஸ்பென்ஸ் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என செங்கோட்டையன் தெரிவித்த அடுத்த நாள் அவரை கட்சி பொறுப்புகளில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கி உத்தரவிட்டார். இந்நிலையில் சென்னையில் இருந்து கோபி செட்டிபாளையம் திரும்பிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று (செப்டம்பர் 25) செய்தியாளர்களிடம் பேசுகையில், என் மனைவி சென்னையில் சிகிச்சையில் இருக்கிறார். அவரை பார்க்க சென்றேன். அதே சமயம் நேற்று அரசியல் ரீதியாகவும், மற்ற ரீதியாகவும் யாரிடத்திலும் நான் பேசவில்லை
என்னை பொறுத்தவரையில் இந்த இயக்கம் வலிமை பெற வேண்டும். அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்ற நோக்கம் மட்டும் தான். எம்ஜிஆர், ஜெயலலிதா சட்டமன்றத்தில் உரையாற்றும் போது 100 ஆண்டுகள் இந்த இயக்கம் நிலைத்திருக்கும் என்றனர். அந்த கனவை நிறைவேற்றுவதற்கு தொண்டர்கள் உள்ள இந்த இயக்கத்தை உயிர்மூச்சாக, எல்லோரும் எல்லாம் பெற வேண்டும். இந்த நோக்கத்தோடுதான் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற எனது கருத்தை அன்று வெளிப்படுத்தினேன்.
என் குறிக்கோள் ஒன்றுதான். அந்த குறிக்கோள் அடிப்படையில் நேற்று யாரையும் சந்திக்கவில்லை. அரசியல் ரீதியாக யாரிடத்தில் நான் பேசவில்லை. என்றார்.
அதிமுக ஒருங்கிணைப்பு பணி எப்படி உள்ளது என்ற கேள்விக்கு, ஒருமித்த கருத்துள்ளவர்கள் என்னிடம் பேசுகிறார்கள். ஆனால் யார் என்னிடம் பேசினார்கள் என்பது சஸ்பென்ஸ். அதை இப்போது கூற இயலாது என்றார்.