“அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என எதை மனதில் வைத்து பேசினார் என்பது எனக்கு தெரியாது” என அதிமுகவின் மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் மூத்த தலைவர்களின் ஒருவரான முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக கூறப்பட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களாகக் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை செங்கோட்டையன் தவிர்த்து வந்தார். சட்டமன்றத்திலும் தனித்துச் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் செப்டம்பர் 5 ம் தேதி மனம் திறந்து பேச உள்ளேன் என்று செங்கோட்டையன் அறிவித்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில் நேற்று (செப்டம்பர்-3) அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளார். இனியும் அம்மாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வாய்ப்பில்லை என்று தெரிவித்திருந்தார்
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 4) தனியார் திருமண மண்டபம் திறப்பு விழாவில் செங்கோட்டையன் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசினார்.
டிடிவி தினகரன் அம்மாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வாய்ப்பில்லை என்பதால் கூட்டணியை விட்டு வெளியேறியுள்ளார் என்ற கேள்விக்கு, “அது அவருடைய கருத்து. அதற்கு நான் பதில் கூற முடியாது. அவர் மனதிலே எண்ண வைத்து அதைக் கூறினார் என்பது எனக்குத் தெரியாது என்றார். இதையடுத்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது நாளை அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்படும்” என்றார்.
முன்னாள் அமைச்சர்கள் யாரவது தொடர்பு கொண்டு பேசினார்களா என்ற கேள்விக்கு, “அனைத்து கேள்விகளும் நாளை கண்டிப்பாகப் பதில் அளிக்கிறேன்” என்றார் செங்கோட்டையன்.