“திமுக, அதிமுக என இருவரும் அண்ணாவை மறந்துவிட்டார்கள் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குற்றம் சாட்டி உள்ளார்.
தமிழக வெற்றிக் கழக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று (ஜனவரி 27) கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அதிமுக அமைச்சர்கள் விஜய்யை விமர்சிப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “பல்முனைத் தாக்குதல் என்பது ஒருவர் மாபெரும் வெற்றியை அடையப் போகிறார் என்பதற்கு எடுத்துக்காட்டு” என்றார்.
முன்னதாக நாமக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில் பெரிய கட்சியின் கொடி பறக்குது, பிள்ளையார் சுழி போடப்பட்டது என சொன்னது எல்லாம் அவர்கள் தான். இன்று நிலைமை மாறும் போது ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்கின்றனர் என்றார்.அதிமுக முன்னாள் அமைச்சர்கள், ஐடி விங் ஆகியோர் திமுக மீது இருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து தாக்குதல் நடத்த வேண்டும். ஆனால் அவர்கள் அதைச் செய்யாமல், திமுகவிற்கு பி-டீமாக அதிமுக இருக்கிறது. புதிதாக உருவான கட்சி மீது குற்றச்சாட்டு சொல்வது என்பது எதிர்க்கட்சி நடைமுறையில் இதுவரை இல்லாத ஒன்று என்று தெரிவித்தார்.
செங்கோட்டையனை அருகில் வைத்துக்கொண்டு அதிமுக ஊழல் கட்சி என விஜய் பேசுவது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது குறித்த கேள்விக்கு, “எம்ஜிஆர், ஜெயலலிதா உடன் பயணம் செய்தவன் நான். என் மீது ஊழல் குற்றச்சாட்டு என யாராவது சொன்னால், உச்சநீதிமன்றம் வரை அதற்கான தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
அரசியல் காரணங்களால் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் எந்தக் குற்றமும் செய்யவில்லை எனத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. என் மீது என்ன குற்றச்சாட்டு நிரூபணம் ஆகியிருக்கிறது எனச் சொல்ல வேண்டும். இப்படி யாராவது அது போன்ற கருத்துக்களைச் சொல்வார்கள் என்றால் அவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்றார்.
டிடிவி தினகரன் குறித்த கேள்விக்கு, “அவர் கூட்டணிக்கு வரவில்லை என்பது ஏமாற்றம் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு நிலைமை இருக்கிறது. அவருடைய சூழல் எப்படி ஏற்பட்டிருக்கிறது எனச் சொல்ல முடியாது. எங்கு சென்றாலும் வாழ்க” என்று தெரிவித்தார்.
டாக்டர் ராமதாஸ் தரப்பு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக செய்தியில் பார்த்தேன். “நல்லது நடக்கட்டும்” என்றார்.
அதிமுக அண்ணாவை மறந்துவிட்டது என விஜய் பேசியது குறித்த கேள்விக்கு, “திமுக, அதிமுக என இருவரும் அண்ணாவை மறந்துவிட்டார்கள். அதனால்தான் நான் வெளியில் வந்தேன். ஜெயலலிதா, அண்ணா படங்களைப் போடாமல் தான் நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். யாரால் நாம் வளர்க்கப்பட்டோம் என்பதை மறந்துவிடக் கூடாது. தவெக இயக்கத்தில் ஜனநாயகம் இருக்கிறது” என்று தெரிவித்தார்.
