கட்சியின் பதவிகளை பறித்தது மகிழ்ச்சி தான் என முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் மூத்த தலைவருமான செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோபியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பிரிந்து கிடக்கும் அதிமுக தலைவர்கள் அனைவரும் மீண்டும் ஒண்றிணைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியதுடன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்தார்.
அதன் தொடர்ச்சியாக நேற்று தேனியில் பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடியின் பிரச்சார வாகனத்தை மறித்து அதிமுக ஒன்றிணைய வேண்டும் என பதாகைகளுடன் சிலர் முற்றுகையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து திண்டுக்கலுக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, இன்று காலை கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
அதன் முடிவில், அதிமுக அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஆகிய கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனை விடுவித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக நியூஸ் 18 தமிழ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த செங்கோட்டையன், “தர்மம் வெல்ல வேண்டும்; கட்சிப்பதவியை பறித்ததற்கு என்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.